செய்திகள் மலேசியா
ரஷ்யாவுடன் நேரடி விமானச் சேவைகள், விசா இல்லாத பயணம்: புடினிடம் அன்வார் கோரிக்கை
பெட்டாலிங் ஜெயா:
மலேசியா, ரஷ்யா இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் நேரடி விமானச் சேவைகள், விசா இல்லாத பயண வசதிகள் ஆகியவை அடுத்த முக்கிய நடவடிக்கைகளாக அமையக்கூடும் என்று டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
புது தில்லியில் நடைபெற்ற 18-ஆவது பிரிக்ஸ் (BRICS) தலைவர்கள் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான இருதரப்பு சந்திப்பின்போது பிரதமர் இந்த இரண்டு முன்முயற்சிகள் குறித்தும் பேசினார்.
ஏற்கனவே கொள்கை அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள், இருதரப்பு சுற்றுலா, வர்த்தகம், முதலீட்டை கணிசமாக அதிகரிக்கும் என்று அன்வார் குறிப்பிட்டார்.
"இந்தச் சந்திப்பு சுமூகமான சூழலில் நடைபெற்றது; இது மலேசியா-ரஷ்யா உறவுகளின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கான வாய்ப்பை வழங்கியது," என்று அவர் தெரிவித்தார்.
"இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த, நேரடி விமானச் சேவைகள், விசா இல்லாத பயண வசதிகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை நான் வலியுறுத்தினேன்."
ரஷ்யாவிற்கு மலேசிய பாமாயில் ஏற்றுமதியை அதிகரிப்பது, இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவதற்கான வழிகளை ஆராய்வது குறித்தும் விவாதங்கள் கவனம் செலுத்தின.
ஆற்றல் துறை ஒத்துழைப்பில் ரஷ்யாவின் ஆதரவை அன்வார் பாராட்டினார்; இத் துறையில் இரு நாடுகளும் ஒன்றையொன்று சார்ந்த நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இருதரப்பு ஒப்பந்தங்கள் விரைவாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
"எட்டப்பட்ட ஒவ்வொரு ஒப்பந்தமும் விரைவாகச் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட வேண்டும்," என்று அன்வார் கூறினார்.
"செயல்படுத்தும் பணிகளை ஒருங்கிணைக்கவும் விரைவுபடுத்தவும் மலேசியா, ரஷ்யா இடையே ஒரு சிறப்பு ஏற்பாட்டை (mechanism) நான் முன்மொழிந்தேன்; இதற்கு அதிபர் புடின் ஒப்புக்கொண்டார்" என்று அன்வார் குறிப்பிட்டார்.
மலேசிய மன்னர் சுல்தான் இப்ராஹிம் விடுத்த அழைப்பின் பேரில், ரஷ்ய அதிபர் புடின் மலேசியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளுமாறும் அன்வார் அழைப்பு விடுத்தார்.
இந்த வருகை மலேசியா-ரஷ்யா உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கக்கூடும் என்று கூறிய அவர், இருதரப்பு உறவுகள் மிகவும் நெருக்கமானதாகவும், முதிர்ச்சியடைந்ததாகவும், பரஸ்பர நன்மை பயப்பதாகவும் உள்ளன என்று விவரித்தார்.
மலேசியாவும் ரஷ்யாவும் 1967 முதல் நீண்டகால இராஜதந்திர உறவுகளைப் பேணி வருகின்றன; வர்த்தகம், முதலீடு, ஆற்றல், கல்வி, சுற்றுலா, பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு நிலவுகிறது.
2025-ஆம் ஆண்டில், மொத்தம் RM8.72 பில்லியன் மதிப்புள்ள வர்த்தகத்துடன், ஐரோப்பிய நாடுகளில் மலேசியாவின் ஒன்பதாவது பெரிய வர்த்தகப் பங்காளியாக ரஷ்யா திகழ்ந்தது. ரஷ்யாவிற்கான மலேசியாவின் முதன்மை ஏற்றுமதிகளில் மின் மற்றும் மின்னணுப் பொருட்கள், இயந்திரங்கள், உபகரணங்கள், பாகங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவை அடங்கும்.
அதே சமயம் அதன் பிரதான இறக்குமதிகளில் பெட்ரோலியப் பொருட்கள், கனிமங்கள், இரசாயனங்கள், இரசாயனம் சார்ந்த பொருட்கள் ஆகியவை அடங்கியிருந்தன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2026, 10:36 am
மலேசியா-இந்தியா வர்த்தகத் தளத்தை ஒருங்கிணைக்க அமைச்சர் ரமணனுக்குப் பொறுப்பு: அன்வார், மோடி முடிவு
September 13, 2026, 10:32 am
பி40 மாணவர்களுக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங்குவது குறித்து உயர்கல்வி அமைச்சு பரிசீலிக்க வேண்டும்: ஜாஹித்
September 13, 2026, 10:28 am
நெகிரி செம்பிலான் மந்திரி புசார் பிரச்சினை தீர்க்கப்படும்: ஜாஹித்
September 12, 2026, 11:21 pm
உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா? தைரியம் இருந்தால், அதை விரைவாகச் செய்யுங்கள்: ஜாஹித்
September 12, 2026, 11:20 pm
நம்பிக்கை, சேவை, ஒற்றுமை இந்திய சமூகத்தை வலுப்படுத்த வழிகாட்டும்: டத்தோ சிவக்குமார்
September 12, 2026, 5:21 pm
அரசியல் அல்ல, நேர நெருக்கடியே காரணம்: பிரதமரின் தமிழக பயணம் ரத்தானது குறித்து டத்தோஸ்ரீ ரமணன் முற்றுப்புள்ளி
September 12, 2026, 4:56 pm
