செய்திகள் மலேசியா
நேப்பாளத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள 91 மலேசியர்களைக் கண்டறிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்: யுனேஸ்வரன்
கோலாலம்பூர்:
நேப்பாளம், சீனா எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட பேரிடரில் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள 91 மலேசியர்கக் கண்டறிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
தேசிய ஒருமைப்பாட்டுத் துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் இதனை வலியுறுத்தினார்.
ஆகஸ்ட் 26ஆம் தேதி நேபாளத்தின் ராசுவா மற்றும் திபெத்தின் கியிரோங் அல்லது கெருங் பகுதிகளைத் தாக்கிய இந்தப் பேரிடரில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்தார்.
விஸ்மா புத்ராவின் ஆகஸ்ட் 29ஆம் தேதி இரவு 8 மணி நிலவரப்படி, நேபாளத்தில் 55 மலேசியர்களும், சீனாவில் 36 மலேசியர்களும் இன்னும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளவர்களில் சுற்றுலாப் பயணிகள், மலையேறுபவர்கள், கைலாய மலைக்குச் சென்ற சமய யாத்திரிகர்கள், மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறையைச் சேர்ந்த இரு அதிகாரிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரும் அவர்களது குடும்பங்களுக்கு முக்கியமானவர்கள் என்பதால், அவர்களின் குடும்பத்தினருக்கு தகவல்கள் நேரடியாகவும், சீரான இடைவெளியிலும், தொடர்ந்து வழங்கப்படுவதை விஸ்மா புத்ரா உறுதி செய்ய வேண்டும்.
குடும்பங்களுக்காக 24 மணி நேர தொலைபேசி சேவையுடன் கூடிய சிறப்பு ஒருங்கிணைப்பு மையம் அமைத்தல், ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனிப்பட்ட தொடர்பு அதிகாரியை நியமித்தல் மற்றும் தினசரி குறிப்பிட்ட நேரத்தில் தகவல் விளக்கங்களை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், விஸ்மா புத்ரா, தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம், மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறை, நேப்பாளம், சீன அதிகாரிகள், சுற்றுலா நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மலேசியாவின் சிறப்பு மீட்புக் குழுவான STORM-ஐ அனுப்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்கூட்டியே தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும், அதிகாரப்பூர்வ கோரிக்கை மற்றும் அனுமதி கிடைத்தவுடன் தாமதமின்றி குழுவை அனுப்பக்கூடிய வகையில் தேவையான ஏற்பாடுகளை முடிக்க வேண்டும் என்றும் யுனேஸ்வரன் தெரிவித்தார்.
அதேவேளை, காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு உளவியல் மற்றும் சமூக ஆதரவு வழங்குவதுடன், தேவையான குடும்ப உறுப்பினர்கள் நேபாளம் அல்லது சீனாவுக்குச் செல்வதற்கான ஆவணங்கள், பயணம் மற்றும் தளவாட உதவிகளையும் அரசாங்கம் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சரிபார்க்கப்படாத எண்ணிக்கைகள், புகைப்படங்கள் அல்லது தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்ப வேண்டாம் என பொதுமக்களையும் ஊடகங்களையும் கேட்டுக்கொண்ட யுனேஸ்வரன், இதுபோன்ற நேரத்தில் குடும்பங்களுக்கு மேலும் வேதனையை ஏற்படுத்தக்கூடிய ஊகத் தகவல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
“இந்த நேரத்தில் இனம், மதம் அல்லது அரசியல் வேறுபாடுகள் இல்லை. தங்களது அன்புக்குரியவர்களின் பாதுகாப்பான வருகைக்காகக் காத்திருக்கும் மலேசியர்கள் மட்டுமே உள்ளனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்பு கொள்ள முடியாதுள்ள அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என பிரார்த்திப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் பேரிடரால் பாதிக்கப்பட்ட நேபாளம் மற்றும் திபெத் மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதாகவும் யுனேஸ்வரன் ராமராஜ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 30, 2026, 6:25 pm
பொது சுகாதாரத் துறையை இலக்கவியமயமாக்கலுக்கு 1 பில்லியன் ரிங்கிட் நிதி உதவி: ஃபஹ்மி
August 30, 2026, 6:10 pm
அடுத்த ஆண்டு பள்ளிகளுக்கான பராமரிப்பு ஒதுக்கீடு 50 சதவீதம் அதிகரிக்கப்படும்: பிரதமர்
August 30, 2026, 6:09 pm
பூடி ரோன் 95 பெட்ரோல் மாதத்திற்கு மீண்டும் 300 லிட்டராக உயர்த்தப்படும்: பிரதமர்
August 30, 2026, 3:05 pm
நேப்பாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்; மலேசியாவின் மனிதாபிமான உணர்வை பிரதிபலிக்கின்றன: குணராஜ்
August 30, 2026, 10:27 am
8 ஆண்டுகளாக தேசியக் கொடியை விநியோகித்து தேசப்பற்றை பரப்பும் 64 வயது ஆர். ராதா
August 30, 2026, 10:27 am
