செய்திகள் மலேசியா
ஈப்போவில் மலேசியா இருமேனி முஸ்லிம் ஜமாஅத் குடும்ப தினம்: சிறந்த மாணவர்களுக்கு தங்கக் காசு பரிசளிப்பும் களைகட்டிய பட்டிமன்றமும்
ஈப்போ:
மலேசியா இருமேனி முஸ்லிம் ஜமாஅத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட குடும்ப ஒற்றுமை தினம் 29.08.2026 அன்று ஈப்போ ரெட் கிராஸ் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
காலை 10 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்ச்சியில், மலேசியாவின் பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் இருமேனி முஸ்லிம் ஜமாஅத்தைச் சேர்ந்த குடும்பங்கள் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக சிறுவர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சிறுவர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து பெரியவர்களுக்கான கேள்வி–பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு டத்தோ எஸ். எம். எஸ். சிராஜ் தீன் தலைமை தாங்கினார். அறிவு, மார்க்கம், பொது அறிவு சார்ந்த கேள்விகளுக்கு பங்கேற்பாளர்கள் ஆர்வத்துடன் பதிலளித்தனர்.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள், குழந்தைகளிடையே அதிகம் பேசப்படும் “சிறுவர்கள் கையில் ஸ்மார்ட்போன் – அவசியம் / அவசியம் இல்லை” என்ற தலைப்பில் சுவாரஸ்யமான பட்டிமன்றம் நடைபெற்றது.
இந்தப் பட்டிமன்றத்திற்கு ஹாஜி பி. எஸ். எம். ஷாஹுல் ஹமீது தலைமை தாங்கினார்.
இதில் மௌலவி முபாரக் அலி ஆலிம் ஃபாஜில் மன்பயீ, கவிஞர் செய்யது உஸ்மான், மௌலவி ஹாஜா ஜூபைர்தீன் ஆலிம் ஃபாஜில் மன்பயீ, ராஜா நஸ்ருதீன் ஆகியோர் பங்கேற்று தங்களது கருத்துக்களை ஆணித்தரமாகவும் சுவையாகவும் சிந்தனையைத் தூண்டும் விதமாகவும் எடுத்துரைத்தனர்.
சிறுவர்களின் கல்வி, ஒழுக்கம், நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு, ஸ்மார்ட்போனால் ஏற்படும் நன்மை–தீமைகள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதால் பட்டிமன்றம் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இவ்வாண்டு எஸ்பிஎம் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ - மாணவிகளுக்கு தங்க காசுகள் பரிசளிக்கப் பட்டு சிறப்பிக்கப் பட்டனர்.
மேலும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடும்பங்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் வகையில் பல்வேறு வகையான அன்பளிப்புப் பொருட்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகளாக வழங்கப்பட்டன.
குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி, அன்பையும் சகோதரத்துவத்தையும் பரிமாறிக்கொள்வதற்கும், இளைய தலைமுறையினரிடையே உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இந்தக் குடும்ப ஒற்றுமை தினம் சிறந்த வாய்ப்பாக அமைந்தது.
மலேசியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த இருமேனி முஸ்லிம் ஜமாஅத் குடும்பங்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
காலை 10 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சிகள் பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுடன் தொடர்ந்து நடைபெற்று, மாலை 6 மணியளவில் குடும்ப ஒற்றுமை தினம் , பெர்மிம் முன்னாள் தலைவர் ஷேக் ஃபரீத் அவர்கள் நன்றியுரை நிகழ்த்த இனிதே நிறைவுற்றது.
இந்நிகழ்வு, இருமேனி முஸ்லிம் ஜமாஅத் மக்களிடையே குடும்ப ஒற்றுமை, சகோதரத்துவம், பரஸ்பர அன்பு, சமூக நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்ததாக பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
August 30, 2026, 10:27 am
8 ஆண்டுகளாக தேசியக் கொடியை விநியோகித்து தேசப்பற்றை பரப்பும் 64 வயது ஆர். ராதா
August 30, 2026, 10:27 am
நேப்பாளம் வெள்ளம்: மலேசியா காத்மாண்டுவின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது
August 30, 2026, 10:26 am
நீரின் மேலிருந்த 200 வீடுகள் எரிந்து சாம்பலாகின: மூவர் மரணம்
August 30, 2026, 9:29 am
சரவாக் மாநிலத்தின் பல மாவட்டங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது
August 29, 2026, 11:03 pm
நீண்ட விடுமுறையால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது
August 29, 2026, 11:01 pm
மடானி அரசு சூதாட்ட நடவடிக்கைகளை ஒருபோதும் ஆதரித்ததில்லை: பிரதமர்
August 29, 2026, 11:00 pm
