நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் தேசியநாள் பற்றுறுதி கொண்டாட்ட விழா

சிங்கப்பூர்:

சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள , புகழ்பெற்ற அங்குலியா பள்ளிவாசல் அரங்கில் தேசிய நாள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரசாக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், 'சிங்கப்பூர் இந்திய முஸ்லிம்' என்பதிலுள்ள மூன்று சொற்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல என்றும் சமூகம் சிறப்பாக முன்னேறுவது நாட்டின் முன்னேற்றத்துக்குப் பங்களிக்கும் என்றும் அவர் கூறினார்.  

பல்வேறு வேதங்கள் கூறியுள்ள கருத்துகளைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், அவை கூறும் மதிப்புகளும் ஒன்றோடொன்று போட்டியிடுவதில்லை எனச் சுட்டினார்.

“சிங்கப்பூரில் நல்ல முஸ்லிமாக இருப்பது கடினமில்லை. இங்கு நாம் வசிப்பது நமக்குக் கிடைத்த பேரருள். ஒரு சிங்கப்பூர் இந்திய முஸ்லிமாக சமூகத்திற்குச் சேவை செய்வதும் அதன்மூலம் நாட்டிற்கும் சேவையாற்றுவதும் நமது கடமையாகும்,” என்று டாக்டர் ஹமீது ரசாக் எடுத்துரைத்தார்.

புனித திருக்குர்ஆன் வசனங்களை ஹாஃபிஸ் ஹம்ஸா ஃபாஸில் ஓதினார் . 

பென்கூலன் பள்ளிவாசல் தலைவரும் மூத்த சமூக அடித்தளத் தலைவருமான ஹாஜி முஹம்மது ரஃபீக் பற்றுறுதி அங்கத்தை நடத்தினார். 

சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவைத்தலைவரும், மெண்டாக்கி இயக்குனரும், சமூக அடித்தளத் தலைவருமான ஹாஜி முஹம்மது பிலால் அனைவரையும் வரவேற்று பங்காளிகளுக்கும், தொடர் ஆதரவாளர்களுக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 

‘நமது நாடும், நம்மை உருவாக்கியவர்களும்’ எனும் தலைப்பில் மார்சிலிங் உயர்நிலைப்பள்ளி மாணவி அஸ்மத்துல் உரூசியா தமிழிலும் , ‘சிங்கப்பூர் அனைவருக்குமானது - குறிப்பாக இளையோருக்கானது!’ எனப் பொருள்படும் ஆங்கிலத் தலைப்பில் திரு முஹம்மது ஜாஃபிர் ஆகிய இரு இளையர்கள் சிறப்புரையாற்றினர்.  ஹாஜி பரிஹுல்லாஹ் ‘சின்னஞ்சிறு எழில் நாடு’ பாடலைப் பாடினார்.

தேசிய நாள் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள, ஸ்ரீ நாராயணா மிஷன் அமைப்பின் முன்னாள் தலைவர் ஜெயதேவ் உன்னித்தன், அதன் தலைமை நிர்வாக அதிகாரி தேவேந்திரன், சிங்கப்பூர்த் தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவர் தனபால் குமார் ஆகியோருக்கு பேரவை சார்பில் வாழ்த்தி சிறப்பு செய்யப்பட்டது. 

முன்னதாக இச்சிறப்பான நிகழ்வுக்கு ஆதரவாளரான அஜ்மல் குழும நிறுவனங்களின் இயக்குனர் திரு அஜ்மல்தீன், அங்குலியா பள்ளிவாசல் தலைவர் ஹாஜி கமால் சுலைமான் அங்குலியா ஆகியோருக்கு சிறப்பு செய்து நன்றி தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில், மேனாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் டாக்டர் ஆர். தினகரன், வளர்தமிழ் இயக்கத்தலைவர் நசீர்கனி, தமிழர் பேரவைத் தலைவர் பாண்டியன், இந்திய மரபுடைமை நிலையத்தலைவர்  ஆர். ராஜாராம், தமிழ் முரசின் ஆசிரியர் த. ராஜசேகர் , சிங்கப்பூர் தாவோயிஸ்ட் அமைப்பின் தலைவர் மாஸ்டர் ரெவரண்ட் லீ, ஜாமியா சிங்கப்பூர் இயக்குநர் டாக்டர் எச். எம். சலீம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். பேரவையின் பதினெட்டு இணை அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் என திரளாக கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஏற்பாட்டுக்குழுவினரோடு இணைந்து பொதுச்செயலாளர் அப்துல் மாலிக், பொருளாளர் ஹாஜி ஜெகபர் சாதிக், செயலாளர்கள் ஹாஜி முஹம்மது ஜாஃபர், ஹாஜி அப்துர் ரஹ்மான் ஆகியோர் செய்திருந்தனர்.

- ரோஷித் அலி 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset