செய்திகள் மலேசியா
மலேசியத் துறைமுகங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்: கடல்சார் துறையினர் எச்சரிக்கை
பெட்டாலிங் ஜெயா:
மலேசியா, நம்பிக்கைக்குரிய வர்த்தக, கப்பல் போக்குவரத்து மையமாகத் திகழும் தனது நற்பெயரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
அதற்கு, சந்தேகத்திற்குரிய வர்த்தக நடவடிக்கைகளுக்கு நாட்டின் துறைமுகங்கள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மலேசியத் துறைமுகங்களை அத்தகைய நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதாகச் சந்தேகிக்கப்படும் எந்தவொரு நிறுவனத்தையும் அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று கடல்சார் துறையைச் சேர்ந்த டத்தோஸ்ரீ ஜெயந்திரன் ராமசாமி கூறினார்.
இதில் ஆதாரங்களைத் திரட்டுவது, சம்பந்தப்பட்ட சரக்குகளை அடையாளம் காண்பது மற்றும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது ஆகியவை அடங்கும்.
எழுப்பப்படும் கவலைகளை மலேசியா அலட்சியப்படுத்தக் கூடாது.
ஏனெனில் பொருட்களின் பிறப்பிடம் குறித்த சான்றிதழ்கள் (Certificate of Origin) அல்லது நாட்டின் சரக்குக் கட்டுப்பாடுகள் குறித்து ஏதேனும் சந்தேகம் எழுந்தால், சட்டப்பூர்வமாக வணிகம் செய்யும் உள்ளூர் நிறுவனங்கள் பாதிக்கப்படும்.
சர்வதேச வர்த்தக பங்காளிகள் நமது பொருட்களின் பிறப்பிடச் சான்றிதழ் அல்லது சரக்குக் கட்டுப்பாடுகளைக் கேள்வி கேட்கத் தொடங்கினால், சட்டப்பூர்வமாக தொழில் செய்யும் ஒவ்வொரு மலேசிய நிறுவனமும் பாதிப்பை எதிர்கொள்ளும்.
மறுஏற்றுமதி (Transshipment) என்பது குற்றமல்ல. மலேசியா ஒரு முக்கிய வர்த்தக நாடாகும், மேலும் நமது துறைமுகங்கள் வழியாகச் சரக்குகள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.
இருப்பினும், சட்டப்பூர்வமான மறுஏற்றுமதியை, பொருட்களின் உண்மையான பிறப்பிடத்தை மறைக்க முயலும் முயற்சிகளிலிருந்து தெளிவாக வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவால் அதிக வரி விதிக்கப்படும் நாடுகளிலிருந்து கொண்டு வரப்படும் பொருட்கள், மலேசியாவில் மீண்டும் பேக் செய்யப்படுவதாகவோ, புதிய லேபிள் ஒட்டப்படுவதாகவோ அல்லது குறைந்தபட்ச செயலாக்கத்திற்கு மட்டுமே உட்படுத்தப்பட்டு, மலேசிய தயாரிப்பு எனக் கூறி ஏற்றுமதி செய்யப்படுவதாகவோ கவலைகள் நிலவுவதாக அவர் குறிப்பிட்டார்.
வெறும் லேபிளையோ அல்லது பேக்கிங்கையோ மாற்றுவதால் மட்டுமே ஒரு பொருள் தானாகவே மலேசியத் தயாரிப்பாக மாறிவிடாது.
உண்மையான உற்பத்தி நடவடிக்கையோ அல்லது குறிப்பிடத்தக்க மாற்றமோ நாட்டில் நடந்துள்ளதா என்பதை அதிகாரிகளே தீர்மானிக்க வேண்டும்.
மேலும், விசாரணை என்பது வெறும் கன்டெய்னர்களோடு மட்டும் நின்றுவிடக் கூடாது என்றும், இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், கப்பல் முகவர்கள், சுங்க முகவர்கள் மற்றும் கிடங்கு நடத்துபவர்கள் உட்பட அந்தச் சரக்குக்கு பின்னால் உள்ள நபர்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ ஜெயந்திரன் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 16, 2026, 10:51 pm
கெஅடிலான் மக்களின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும்; தகவல் தொடர்பை வலுப்படுத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
August 16, 2026, 10:49 pm
நிலைத்தன்மைக்காக அம்னோவுடன் ஒத்துழைக்க வேண்டியதன் யதார்த்தத்தை ஜசெக ஏற்றுக் கொள்கிறது: அந்தோனி லோக்
August 16, 2026, 10:48 pm
