நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போதைப்பொருள் கடத்த முயன்ற மலேசிய விமானி தொடர்புடைய சிசிடிவி காட்சிகளை இந்தோனேசிய சுங்கத்துறை வெளியிட்டது

ஜாகர்த்தா:

போதைப்பொருள் கடத்த முயன்ற மலேசிய விமானி தொடர்புடைய சிசிடிவி காட்சிகளை இந்தோனேசிய சுங்கத்துறை வெளியிட்டது.

சோகர்னோ-ஹட்டா அனைத்துலக விமான நிலையம் வழியாக சுமார் 25 கிலோ எக்ஸ்டஸி போதைப்பொருளைக் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கடந்த வாரம் மலேசிய விமானி கைது செய்யப்பட்டார்.

அந்த மலேசிய விமானியின் நடமாட்டங்களைக் காட்டும் சிசிடிவி காட்சிகளை இந்தோனேசிய சுங்கத் துறை இன்று வெளியிட்டுள்ளது.

சுங்கத் துறையின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்ட அந்தக் காணொளியில்,

விமானி சீருடை அணிந்த 39 வயது சந்தேக நபர், சாமான்கள் பெறும் பகுதியிலிருந்து ஒரு பெரிய வெள்ளி நிற சூட்கேஸை எடுத்துக்கொண்டு, மற்றொரு கருப்புப் பையை இழுத்துக்கொண்டு, வருகை மண்டபத்தின் வழியாக சுங்க சோதனைப் பகுதியை நோக்கி நடந்து செல்வது காட்டப்பட்டுள்ளது.
காணொளியின் விவரிப்பின்படி, அதிகாரிகள் இடர் மதிப்பீட்டு செயல்முறை மூலம் அவரை அடையாளம் கண்ட பிறகு, சந்தேக நபர் விமானப் பணியாளர்களுக்கான சிறப்பு விரைவுப் பாதையில் நுழைந்து, சோதனைக்காக சுங்க சோதனை அறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

பின்னர் அந்தக் காணொளி, பயணப் பெட்டி சோதனை செயல்முறைக்கு மாறுகிறது.

அதில், சுங்க அதிகாரிகள் வெள்ளி நிறப் பையைத் திறந்து, அதிலுள்ள ஆடைகள் மற்றும் பிற பொருட்களை வெளியே எடுக்கின்றனர்.

அதன்பிறகு, அதன் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல பழுப்பு நிறப் பொட்டலங்களைக் கண்டுபிடிக்கின்றனர்.

சோதனையின் போது சந்தேக நபரிடம் விசாரணை நடத்தப்பட, சுங்க அதிகாரிகள் அந்தப் பயணப் பெட்டியைச் சோதித்து அதிலிருந்து பொட்டலங்களை அகற்றும் காட்சி ஒரு நெருக்கமான காணொளியில் காட்டப்படுகிறது.

அதில் போதைப் பொருளும் கண்டுப் பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset