செய்திகள் மலேசியா
உணவகத் துறையில் வெளிநாட்டு தொழிலாளர் பற்றாக்குறையைத் தீர்க்க பிரதமரின் விரைவான நடவடிக்கை – FMBA பாராட்டு
கோலாலம்பூர்:
மலேசிய உணவகத் துறையில் நிலவி வரும் வெளிநாட்டு தொழிலாளர் பற்றாக்குறையைத் தீர்க்க பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மேற்கொண்டுள்ள விரைவான நடவடிக்கையை மலேசிய வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (FMBA) வரவேற்றுள்ளது.
பட்டர்வொர்த் நகரில் நடைபெற்ற இந்திய முஸ்லிம் மாற்றத்திற்கான கட்டமைப்பு (IMTF) 2030 அறிமுக நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நாடு முழுவதும் உணவக உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் அவசரமான தொழிலாளர் பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டினார்.
இந்த வாரம் முதல் முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் அமைச்சுகளுக்கு அறிவுறுத்தியதுடன், வெளிநாட்டு தொழிலாளர்களை கட்டுப்பாடுடனும் நிலைத்தன்மையுடனும் ஆட்சேர்ப்பு செய்வதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
பல மாதங்களாக வெளிநாட்டு தொழிலாளர் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்து FMBA மற்றும் அதன் உறுப்பினர் அமைப்புகள் கவலை தெரிவித்திருந்தன.
இந்த தாமதங்கள் உணவகங்களின் தொடர்ச்சியான செயல்பாடுகள், சேவைத் தரம் மற்றும் முழுமையான தொழிலாளர் அமைப்பைச் சார்ந்துள்ள உள்ளூர் ஊழியர்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தியதாக FMBA தெரிவித்துள்ளது.
பிரதமரின் விரைவான நடவடிக்கை, தொழில்துறையின் தரைமட்டக் கவலைகளை அரசு கவனித்து, காலக்கெடுவுடன் கூடிய நடவடிக்கையாக மாற்றுகிறது என்பதற்கான அடையாளம் எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை பிரதமர் முன்னிறுத்தும் MADANI கொள்கையின் நலவாழ்வு மற்றும் நிலைத்தன்மை அம்சங்களை பிரதிபலிப்பதாக FMBA தெரிவித்துள்ளது.
உணவகங்கள் மற்றும் உணவு-பானத் துறை மலேசியாவின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் முக்கியமான வேலைவாய்ப்பு துறையாக இருப்பதால், இந்த நடவடிக்கை தொழில்துறையின் செயல்பாட்டு நிலைத்தன்மையை மீட்டெடுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், TURAP திட்டத்தை தற்போதைய சூழ்நிலையில் அமல்படுத்த வேண்டாம் என FMBA அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
TURAP நடைமுறைப்படுத்தப்பட்டால் தொழிலாளர் செலவு, மின்சாரம், போக்குவரத்து மற்றும் இணக்கப்பாட்டு செலவுகள் ஏற்கனவே அதிகரித்துள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக உணவு, பொருட்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளின் விலைகள் உயர்ந்து, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் ஏற்கனவே சிரமப்படும் மக்களுக்கு மேலும் சுமை ஏற்படக்கூடும் என்றும் FMBA எச்சரித்துள்ளது.
எனவே, அரசு தொழில்துறை பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து, தொழில் நிலைத்தன்மையையும் நுகர்வோர் நலனையும் சமநிலைப்படுத்தும் அணுகுமுறையை உருவாக்க வேண்டும் என அது வலியுறுத்தியுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 3, 2026, 12:08 pm
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பை பிரதமர் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்: புவாட்
August 3, 2026, 12:05 pm
இருதய அறுவை சிகிச்சைக்கு முன் துணைப் பிரதமர் ஃபாடிலாவின் உடல்நிலை சீராக உள்ளது
August 3, 2026, 11:59 am
தெலுக் இந்தான் மணல் மேடு ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் பக்தி வெள்ளத்தில் நடைபெற்ற தீச்சட்டி உற்சவம்
August 3, 2026, 11:50 am
சோலார் ஊழல் குற்றத்தீர்ப்பு மேல்முறையீட்டில் புதிய சான்றுகளைச் சமர்ப்பிக்க ரோஸ்மா அனுமதி கோரினார்
August 3, 2026, 11:42 am
