செய்திகள் மலேசியா
ரந்தாவ் மக்களின் குடும்பங்களில் நானும் ஒருவன்; இந்தியர்கள் தொடர்ந்து தேசிய முன்னணியை ஆதரிக்க வேண்டும்: முஹம்மத் ஹசான்
செண்டாயான்:
இந்திய சமூகத்தின் ஆதரவு மீண்டும் தேசிய முன்னணி பக்கம் வலுவாக திரும்பி வருவதாகவும், கடந்த காலத்தில் சில தரப்பினர் அளித்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை இந்திய மக்கள் தற்போது தெளிவாக உணர்ந்துள்ளனர்.
ரந்தாவ் சட்டமன்றத் தொகுதி தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இதனை தெரிவித்தார்.
ரந்தாவ் தொகுதியில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஜொகூர் மாநிலத் தேர்தல் முடிவுகள் இந்திய மக்களின் அரசியல் மனநிலையில் ஏற்பட்ட மாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
"இந்திய மக்கள் பாரம்பரியமாக தேசிய முன்னணிக்கு ஆதரவளித்து வந்தவர்கள். சில அரசியல் கட்சிகள் அளித்த பொய்யான வாக்குறுதிகளையும், தேசிய முன்னணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளையும் நம்பி ஒரு கட்டத்தில் அவர்கள் வேறு விதமாக வாக்களித்தது உண்மை. ஆனால் அந்த முடிவு அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்பதை இன்று அவர்கள் தெளிவாக உணர்ந்துள்ளனர். அதனால் மீண்டும் தேசிய முன்னணிக்கு ஆதரவு பெருகி வருகிறது," என்று அவர் கூறினார்.
ரந்தாவ் தொகுதியில் இந்திய சமூகத்துடன் தனக்கு நீண்டகால நெருக்கமான உறவு இருப்பதாகக் கூறிய முகமட் ஹசான், "இந்த தொகுதியில் உள்ள இந்திய மக்கள் என்னை ஒரு அரசியல்வாதியாக மட்டுமல்ல, தங்கள் குடும்ப உறுப்பினராகவே பார்க்கிறார்கள். அவர்களின் குடும்பத்தில் நானும் ஒருவன் என்ற அளவுக்கு எங்களுக்குள் நெருக்கமான உறவு உள்ளது. அது தேர்தல் காலத்திற்காக உருவாக்கப்பட்ட உறவு அல்ல; பல ஆண்டுகளாக வளர்ந்த நம்பிக்கையின் வெளிப்பாடு," என்றார்.
தான் ரந்தாவ் தொகுதியில் பிறந்து வளர்ந்தவர் என்பதால், அப்பகுதி மக்களின் வாழ்க்கை, தேவைகள் மற்றும் சவால்களை நன்கு அறிந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"நான் இங்கே பிறந்தவன். இங்குள்ள மக்களோடு வளர்ந்தவன். எனவே, இந்த மண்ணின் தேவைகளும், மக்களின் எதிர்பார்ப்புகளும் எனக்கு நன்றாக தெரியும். அதனால்தான் மக்கள் எந்த நேரத்திலும் என்னை நேரடியாக அணுகி தங்களது பிரச்சினைகளை பகிர்ந்து கொள்கிறார்கள்," என்று அவர் தெரிவித்தார்.
தொகுதியில் நீண்டகாலமாக நிலவி வந்த பல நில உரிமைப் பிரச்சினைகளுக்கு தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் தீர்வு காணப்பட்டதாகவும் அவர் நினைவூட்டினார்.
அதேபோல், நாட்டின் மிக நவீன வசதிகளைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றாக திகழும் செண்டாயான் தமிழ்ப்பள்ளி தேசிய முன்னணி ஆட்சிக் காலத்திலேயே கட்டப்பட்டதாக அவர் கூறினார்.
"இந்த தொகுதியில் வாழும் இந்திய மக்களின் குழந்தைகள் தரமான கல்வியைப் பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாக இருந்தது. அதற்காக அனைத்து வசதிகளும் கொண்ட புதிய தமிழ்ப்பள்ளி கட்டும் முயற்சியை முன்னெடுத்தோம். இன்று அந்தப் பள்ளி நாட்டிலேயே முன்னுதாரணமாக திகழ்கிறது," என்றார்.
மேலும், பண்டார் செண்டாயான் பகுதி கடந்த சில ஆண்டுகளில் வேகமான வளர்ச்சியை கண்டுள்ளதாகவும், பல புதிய குடியிருப்புத் திட்டங்கள், வர்த்தக வளாகங்கள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடுகள் அங்கு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
"பண்டார் செண்டாயான் தற்போது மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. தலைநகர் கோலாலம்பூரில் வசிக்கும் பலரும் இங்கு வீடுகளை வாங்கி குடியேறி வருகின்றனர். இது இப்பகுதியின் வளர்ச்சிக்கும் எதிர்கால பொருளாதார வாய்ப்புகளுக்கும் சான்றாகும்," என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், தேசிய முன்னணி தலைவர் அறிவித்தபடி மஇகா சார்பில் போட்டியிடும் இரு வேட்பாளர்களும் வெற்றி பெற்றால் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பதவிகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போதைய முக்கிய இலக்கு தேர்தல் வெற்றிதான் எனக் குறிப்பிட்டார்.
"இப்போது எங்களின் முழு கவனமும் தேர்தலில் வெற்றி பெறுவதில்தான் உள்ளது. முதலில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தேசிய முன்னணி ஆட்சியை அமைக்க வேண்டும். அதன் பின்னர் அனைத்து இன மக்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் மாநில நிர்வாகத்தில் தகுதியானவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். இந்திய சமூகத்தின் பங்களிப்பும் உரிய முறையில் மதிக்கப்படும்," என்று டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2026, 8:14 pm
அரச நிறுவனங்களை மதிப்பதுடன் 3ஆர் பிரச்சினைகளைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்: ஜாஹித்
July 27, 2026, 8:12 pm
முட்டைகள் வாங்கியபோது முகமூடி அணிந்த சந்தேக நபரால் சுடப்பட்டதில் ஆடவர் காயம்
July 27, 2026, 8:10 pm
ஒற்றுமையும் வேல் சக்தியும் இந்திய மாணவர்களின் கல்வி வெற்றிக்கு வழிகாட்டும்: சுரேன் கந்தா
July 27, 2026, 8:08 pm
