நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நம்பிக்கை கூட்டணி வசம் இருந்த சிரம்பான் ஜெயா தொகுதியை டத்தோ தினாளன் மீட்டெடுப்பார்: டத்தோஸ்ரீ தனேந்திரன்

சிரம்பான்:

நம்பிக்கை கூட்டணி வசம் இருந்த சிரம்பான் ஜெயா தொகுதியை தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ தினாளன் மீட்டெடுப்பார்.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் இதனை தெரிவித்தார்.

சிரம்பான் ஜெயா தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ஆர். தினாளனுக்கு ஆதரவாக மலேசிய மக்கள் சக்தி கட்சி ஏற்பாடு செய்திருந்த மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இத்தேர்தல் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமானதாகும் என்றார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பக்காத்தான் ஹராப்பான் அரசு, குறிப்பாக சிரம்பான் ஜெயா மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்யவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.

மக்கள் தற்போது மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திறனும் அனுபவமும் தேசிய முன்னணியிடம் உள்ளது.

எனவே இந்தத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு மக்கள் வலுவான ஆதரவை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சிரம்பான் ஜெயாவில் நீண்டகாலமாக நிலவி வரும் அடிப்படை வசதி குறைபாடுகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, இவ்வளவு பெரிய மக்கள் தொகையைக் கொண்ட சிரம்பான் ஜெயா பகுதியில் இதுவரை ஒரு போலீஸ் நிலையம் கூட இல்லாதது வருத்தமளிப்பதாகவும், இந்த பிரச்சினையை தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ஆர். தினாளன் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்வைத்திருப்பது மக்களின் உண்மையான தேவைகளை பிரதிபலிப்பதாகவும் கூறினார்.

மேலும், பொதுமக்களின் பிரச்சினைகளை விரைவாக அறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் டத்தோ ஆர். தினாளன் உருவாக்கியுள்ள செயலியை அவர் பாராட்டினார்.

அந்த செயலி மூலம் மக்கள் தங்களது குறைகள், தேவைகள் மற்றும் உதவிக்கான கோரிக்கைகளை நேரடியாக பதிவு செய்ய முடியும்.

அதன் அடிப்படையில் தினாளன் சம்பந்தப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் செயல்படுவது பாராட்டத்தக்க மக்கள் சேவையாகும் என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் குறிப்பிட்டார்.

இறுதியாக, அண்மையில் ஜொகூர் மாநிலத்தில் தேசிய முன்னணிக்கு கிடைத்த மகத்தான மக்கள் ஆதரவைப் போலவே, நெகிரி செம்பிலான் மாநிலத்திலும் "நீல அலை" எழுச்சி உருவாக வேண்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மக்கள் நல்லாட்சி, வளர்ச்சி மற்றும் பயனுள்ள சேவையை கருத்தில் கொண்டு தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், அதன் மூலம் சிரம்பான் ஜெயாவில் புதிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்றும் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset