நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியர்கள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி காணப்படும்: பிரதமர் அன்வார் உறுதி

பர்மத்தாங் பாவ்:

மலேசியர்கள் அனைவரும் வெறுப்புணர்வைத் தவிர்த்து, ஒருவருக்கொருவர் பரஸ்பர அன்பை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பினாங்கின் பர்மத்தாங் பாவ் பகுதியில் உள்ள மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்தில் சனிக்கிழமை (ஜூலை 25) நடைபெற்ற ‘தேசியப் பயிற்சி வாரம் 2026’ தொடக்க விழாவில் அவர் உரையாற்றினார்.

“நாட்டின் வளர்ச்சியில் எவரும் விடுபடாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்” என்று பிரதமர் அன்வார் வலியுறுத்தினார்.

நாட்டைப் பலவீனப்படுத்தும் பிளவுபடுத்தும் சித்தாந்தங்களை இளைஞர்கள் நிராகரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அரசாங்கத்திடம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வுகள் இல்லை என்பதை ஒப்புக்கொண்ட அவர், ஒன்றிணைந்து செயல்படுவது மூலம் முன்னேற்றம் அடைய அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது என்றார்.

அரசாங்கத் திட்டங்களை மேம்படுத்தவும் எந்தவொரு தரப்பும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்யவும் இளையர்களின் விமர்சனங்களை அரசாங்கம் வரவேற்பதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, மலேசியாவில் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் எவரும் இல்லை என்றும் ஊழலை ஒழித்து நல்நிர்வாகத்தை வலுப்படுத்துவதில் தற்போதைய மடானி அரசாங்கம் உறுதியோடு செயல்பட்டு வருகிறது என்றும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

பொது நிதி தவறான முறையில் கையாளப்படுவதை, பயன்படுத்தப்படுவதைத் தடுக்க தாம் முழு உறுதியுடன் இருப்பதாகக் கூறினார்.

முறையற்ற நிர்வாகம் அரசாங்கத்துக்குப் பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது எனச் சுட்டிக்காட்டிய பிரதமர், அதற்குப் ஃபெல்டா அமைப்பைச் சான்றாகக் குறிப்பிட்டார். 

அரசியல் தலையீடும் மோசமான நிர்வாகத்தின் காரணமாகவும் அந்த அமைப்பு பல பில்லியன் ரிங்கிட் இழப்பைச் சந்தித்ததாகவும்,அதன் கடன்களை அடைக்க அரசாங்கம் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 1 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் விளக்கினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset