நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

MYFutureJobs தளத்தில் 96,700  வேலை வாய்ப்புகள் காலியாக உள்ளன: டத்தோஸ்ரீ ரமணன்

புத்ராஜெயா:

பெர்கெசோவின் கீழ் இயங்கும் 'MYFutureJobs' தளத்தின் வாயிலாகக் கடந்த ஜூன் 30-ஆம் தேதி வரை மொத்தம் 96,700 செயலில் உள்ள வேலை வாய்ப்புகள் காலியாக உள்ளன.

ஒட்டுமொத்தமாக இந்த டிஜிட்டல் தளத்தின் வாயிலாக 668,321 வேலைக்காலி இடங்கள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தற்போது காலியாக உள்ள வேலைவாய்ப்புகளில் சுமார் 40 சதவீதம் உயர் திறன் சார்ந்த பணிகளாகும். 

மேலும் 30 சதவீதத்திற்கும் அதிகமான வாய்ப்புகள் தொழிற்கல்வி மற்றும் பயிற்சிப் புலத்தை (திவேட்) சார்ந்தவை என்றும், சுமார் 20 சதவீத வேலை வாய்ப்புகள் மாதத்திற்கு 5,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான ஊதியத்தை வழங்குகின்றன.

இது உள்ளூர் திறமையாளர்களுக்குத் தொழில்துறையில் நிலவும் அதிக தேவையைப் பிரதிபலிக்கிறது என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு துறைகள் மற்றும் திறன் நிலைகளில் வேலைவாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கப்பெறுவதை இந்த புள்ளிவிவரங்கள் தெளிவுபடுத்துவதாக அமைச்சர் ரமணன் சுட்டிக்காட்டினார்.

MYFutureJobs தளத்தின் மூலம் வேலை தேடுபவர்களுக்குப் பொருத்தமான வேலை வாய்ப்புகளுடனான இணைப்பு, தொழில் வழிகாட்டுதல், சுயவிவரக் குறிப்பு பரிசீலனை, நேர்காணல் ஆயத்தம் மற்றும் மறுதிறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் உட்பட முழுமையான ஆதரவை பெர்கெசோ வழங்கி வருகிறது.

டிஜிட்டல் தளத்தைத் தவிர்த்து, மக்கள் வேலைவாய்ப்புகளைப் பெறுவதை விரிவுபடுத்தும் நோக்கில் நாடு முழுவதும் 'MYFutureJobs வேலைவாய்ப்பு முகாம்களையும்' பெர்கெசோ ஏற்பாடு செய்து வருகிறது.

அதனடிப்படையில், கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலத்தில் 2,989 திட்டங்கள் நடத்தப்பட்டு, அவற்றில் 86,594 வேலை தேடுபவர்கள் பங்கேற்றனர். அவர்களில் 14,029 பேர் வெற்றிகரமாக வேலைவாய்ப்பைப் பெற்ற வேளையில், 15,809 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.

புதிய இடத்தில் வேலையைத் தொடங்குவதற்காக இடம்பெயர வேண்டியிருக்கும் வேலை தேடுபவர்களுக்கு உதவ அரசாங்கம் 1,000 ரிங்கிட் வரை 'இடம்பெயர்வு உதவித் தொகையை' (Bantuan Mobiliti) வழங்குகிறது. எனவே, வேலை தேடி வருபவர்களும் அல்லது தங்களின் தொழில் துறையை மாற்ற விரும்புபவர்களும் சிறந்த வேலைவாய்ப்புகளுக்கான வாசலாகத் திகழும் MYFutureJobs தளத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset