நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திருமணத்திற்கு முன் கர்ப்பமாகும் இளையோர் எண்ணிக்கை கவலைக்கிடம்: 6 ஆண்டுகளில் 21,114 வழக்குகள் பதிவு

கூச்சிங்: 

மலேசியாவில் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகும் இளையோர் பிரச்சினை தொடர்ந்து கவலைக்குரிய நிலையை எட்டியுள்ளது. 2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், 10 முதல் 19 வயதுக்குட்பட்ட 21,114 இளையோர் அரசு சுகாதார நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெண்கள், குடும்பம், சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி ஷுக்ரி தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினை இளையோரின் எதிர்காலத்தை மட்டுமல்லாது, குடும்ப அமைப்பு, சமூக நலனையும் பாதிக்கும் என்பதால், தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு கல்வி, ஆரம்பகட்ட தலையீடுகளை அனைத்து தரப்பினரும் இணைந்து வலுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.

மேலும், இன்றைய இளையோர் உடல் ரீதியான சவால்களை மட்டுமின்றி, டிஜிட்டல் உலகில் இணையவழி துன்புறுத்தல், இணைய மோசடி, பாலியல் சுரண்டல், 'Sexual Grooming' போன்ற ஆபத்துகளையும் எதிர்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

2022-ஆம் ஆண்டு தேசிய சுகாதார, நோய்த்தாக்க மதிப்பீட்டு ஆய்வு (NHMS) படி, 13 முதல் 17 வயதுடைய இளையோரில் 29 சதவீதம் பேர் இணையப் பயன்பாட்டிற்கு அடிமையாகும் அபாயத்தில் இருப்பதாகவும், இது பல்வேறு சமூக, பாதுகாப்பு சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, அரச மலேசிய காவல்துறையின் புள்ளிவிவரங்களின்படி, சிறார்களுக்கிடையிலான சம்மத உறவை உள்ளடக்கிய சட்டரீதியான பாலியல் வன்கொடுமை வழக்குகள் 2019-இல் பதிவான 719 வழக்குகளிலிருந்து 1,139 வழக்குகளாக அதிகரித்துள்ளன.

இதையடுத்து, இளையோருக்கான இனப்பெருக்க ஆரோக்கியக் கல்வி, தனிப்பட்ட பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக நான்சி தெரிவித்தார். மேலும், குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுதல், அவர்களின் டிஜிட்டல் வாழ்க்கையைப் புரிந்துகொண்டு பொறுப்புடன் கண்காணித்தல் ஆகியவற்றின் மூலம் பெற்றோர்களே முதல் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில், நாடு முழுவதும் 150,000 இளையோரைச் சென்றடையும் வகையில் PEKERTI தேசியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 1,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 60,000 மாணவர்களையும், 1,000 இளையோர் கல்வி வழிகாட்டிகளையும் உருவாக்குவது அதன் முக்கிய இலக்காகும் என்றும் அவர் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset