செய்திகள் மலேசியா
புதுமையான சுற்றுலா தயாரிப்புகளை உருவாக்குங்கள்: தனியார் துறைக்கு அமைச்சர் கோரிக்கை
கோலாலம்பூர்:
மலேசியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் வகையில், புதிய, ஆக்கப்பூர்வமான சுற்றுலா தயாரிப்புகளை உருவாக்க தனியார் துறை தீவிரமாக முன்வர வேண்டும் என்று சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் வலியுறுத்தியுள்ளார்.
சமீப ஆண்டுகளில், பல தனியார் நிறுவனங்கள் மதிப்பூட்டப்பட்ட சுற்றுலா தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி, நாட்டின் சுற்றுலாத் துறைக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் பாராட்டினார். இத்தகைய முயற்சிகள் மலேசியாவின் சுற்றுலா போட்டித்திறனை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக, இரண்டு உள்ளூர் தொழில்முனைவோரால் உருவாக்கப்பட்ட கோலாலம்பூர் ஒருங்கிணைந்த டுரியான் அனுபவ மையம் (KLDEX) திகழ்கிறது என்றும், உணவுப் பாரம்பரியம், விவசாயம், படைப்பாற்றல் துறைகளை இணைக்கும் புதிய சுற்றுலா தயாரிப்பாக அது உருவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மலேசியாவின் இயற்கை வளங்கள், பன்முகக் கலாச்சாரம், தனித்துவமான உணவுப் பாரம்பரியம், மக்களின் விருந்தோம்பல் பண்பே உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய பலமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, KLDEX, ASEAN Records, Asia Records அமைப்புகளால், ஆசியாவிலும் மலேசியாவிலும் முதல், மிகப்பெரிய ஒருங்கிணைந்த டுரியான் அனுபவ மையம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றது.
அதேவேளை, ஷா ஆலாமில் MC Durian Innovation Hub என்ற ஆராய்ச்சி மையமும் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. டுரியான் மரங்களின் வயது, தோட்டத் தரம், பழங்களின் சுவை தொடர்பான அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டு, நாட்டின் டுரியான் தொழிலுக்கான ஒரே மாதிரியான தரநிலைகளை உருவாக்குவது இதன் முக்கிய நோக்கமாகும்.
-சங்கீர்த்தனா
