நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

45 மீட்டர் உயரப் பாலத்தில் இருந்து விழுந்ததாக நம்பப்பட்ட பெண்: தீவிர தேடலுக்குப் பிறகு சடலம் மீட்பு

டுங்குன்: 

திரெங்கானுவின் பண்டார் அல் முக்தாஃபி பில்லா ஷா (AMBS) பகுதியில் உள்ள பாலத்தில் இருந்து விழுந்ததாக நம்பப்பட்ட 47 வயது பெண்ணின் சடலம், தீவிர தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு இன்று காலை மீட்கப்பட்டது.

டுங்குன் மாவட்ட காவல்துறைத் தலைவர், சூப்பிரிண்டெண்ட் நிக் அப்துல் ஹாலிம் நிக் மாட், மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த நோர் ஹஸ்லினி டின் என்பவரின் சடலம், காலை 10.30 மணியளவில் மீட்புக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் சடலம், அவர் விழுந்ததாகக் கூறப்படும் இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில், ஆற்றில் மிதந்தபடி மரக்கிளையில் சிக்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

நேற்று காலை சுமார் 10.30 மணியளவில், 45 மீட்டர் உயரமுள்ள பாலத்தில் இருந்து அவர் கீழே விழுந்ததாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, பல்வேறு மீட்பு அமைப்புகளைச் சேர்ந்த 38 பேர், உள்ளூர் கிராம மக்களின் ஒத்துழைப்புடன் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மீட்கப்பட்ட சடலம், பிரேதப் பரிசோதனைக்காக டுங்குன் மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், உயிரிழந்த பெண்ணின் தந்தை டின் சக்காரியா (77), தனது இளைய மகளின் சடலம் மீட்கப்பட்டதற்கு நன்றியையும், தேடுதல் பணியில் ஈடுபட்ட அனைத்து தரப்பினருக்கும் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்தார்.

மேலும், தனது வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள பாலத்தில் இருந்து மகள் விழுவதை நேரில் பார்த்ததாகவும், வேகமான நீரோட்டத்தில் அவர் அடித்துச் செல்லப்பட்டபோது காப்பாற்ற முடியாமல் போனது வாழ்நாள் முழுவதும் நீங்காத வேதனையாக இருக்கும் என்றும் அவர் உருக்கமாக கூறினார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset