செய்திகள் உலகம்
ஜூலை முதல் செப்டம்பர் வரை உலகை உலுக்கும் எல் நினோ தீவிரம் பெறுகிறது: ஐ.நா. எச்சரிக்கை
ஜெனீவா:
எல் நினோ (El Niño) காலநிலை நிகழ்வு, இந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் தீவிர நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு (WMO) எச்சரித்துள்ளது. இதன் தாக்கமாக உலகின் பல பகுதிகளில் கடுமையான வறட்சி, கனமழை, வெப்ப அலை உள்ளிட்ட தீவிர வானிலைச் சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
WMO வெளியிட்டுள்ள உலகளாவிய பருவகால காலநிலை முன்னறிவிப்பின்படி, எல் நினோ ஏற்கனவே உருவாகியுள்ளதுடன், அடுத்த சில மாதங்களில் வேகமாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், உலக நாடுகள் அதன் தாக்கங்களை எதிர்கொள்ள முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டுமென அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
எல் நினோ என்பது, பசிபிக் பெருங்கடலின் மத்திய, கிழக்குப் பகுதிகளில் கடல்மேற்பரப்பு வெப்பநிலை அசாதாரணமாக உயர்வதால் உருவாகும் இயற்கை காலநிலை நிகழ்வாகும். இது உலகளாவிய காற்றோட்டம், காற்றழுத்தம், மழைப்பொழிவு முறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
WMO, எல் நினோவை பலவீனமானது, மிதமானது, வலுவானது, மிகவும் வலுவானது என நான்கு நிலைகளாக வகைப்படுத்துகிறது. தற்போது உருவாகி வரும் எல் நினோ, 'வலுவான' நிலையை எட்டும் வாய்ப்புள்ளதாக அமைப்பு தெரிவித்துள்ளது.
"வெப்பமண்டல பசிபிக் பகுதியில் எல் நினோ நிலைமைகள் தெளிவாக உருவாகியுள்ளன. அவை அடுத்த சில மாதங்களில் விரைவாக வலுப்பெற்று, உலகின் பல பகுதிகளில் தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்படும் சாத்தியத்தை அதிகரிக்கும்," என்று WMO குறிப்பிட்டுள்ளது.
WMO-வின் பொதுச் செயலாளர் செலஸ்டே சவுலோ, எல் நினோவின் தாக்கம் தீவிரமடையும் நிலையில், பல நாடுகளில் வறட்சி, கனமழை, நிலப்பரப்பில் வெப்ப அலைகள், கடல்சார் வெப்ப அலைகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்தார்.
மேலும், விவசாயம், சுகாதாரம் உள்ளிட்ட காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் துறைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
"துல்லியமான பருவகால காலநிலை முன்னறிவிப்புகளும், விரைவான முன்னெச்சரிக்கை அமைப்புகளும் உயிர்களைக் காப்பதோடு, பொருளாதார, சமூக பாதிப்புகளையும் குறைக்க முக்கிய பங்காற்றுகின்றன," என்று அவர் தெரிவித்தார்.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதிகளில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு பதிவாகும் என WMO கணித்துள்ளது. அதேவேளை, இந்திய துணைக்கண்டம், ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட குறைவான மழைப்பொழிவு ஏற்படும் என்றும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காலநிலை மாற்றம் எல் நினோ நிகழ்வின் அடிக்கடி நிகழ்தலையோ அதன் தீவிரத்தையோ நேரடியாக அதிகரிக்கிறது என்பதற்கான ஆதாரம் இல்லை என்றும் WMO தெளிவுபடுத்தியுள்ளது. எனினும், வெப்பமடைந்து வரும் கடல்கள், வளிமண்டலம், வெப்ப அலைகள், கனமழை போன்ற தீவிர வானிலைச் சம்பவங்களின் தாக்கத்தை மேலும் மோசமாக்கக்கூடும் என்றும் அமைப்பு எச்சரித்துள்ளது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 12:02 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் தேசிய தினக் கொண்டாட்டத்தில் வெளியிட்ட அறிவிப்புகள்
August 23, 2026, 1:02 pm
அமெரிக்காவிற்கு எதிராக கனடா கடும் வரிப்பிரகடனம்
August 23, 2026, 12:46 pm
சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்தது
August 22, 2026, 4:20 pm
பெற்றோர் அனுமதியின்றி சிறார் விவரங்கள் சேகரித்த TikTok: US$400 மில்லியன் இழப்பீடு தர ஒப்புதல்
August 22, 2026, 10:33 am
சுவீடன் பள்ளியில் பயங்கரம்: வாளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலி, மூவர் காயம்
August 22, 2026, 10:31 am
ஐரோப்பாவை உலுக்கிய கோடைக்கால வெப்ப அலை: 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
August 21, 2026, 9:45 pm
வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் தேர்வு
August 20, 2026, 2:50 pm
ஜப்பானில் அதிதீவிர கனமழை காரணமாக 13 பேர் பலி
August 20, 2026, 2:49 pm
