நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சைபர் பாதுகாப்பு, இராணுவத் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த மலேசியா - இந்தியா உடன்பாடு

புத்ராஜெயா: 

மலேசியாவும் இந்தியாவும் இருதரப்பு மூலோபாயக் கூட்டுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பாதுகாப்புத் தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு, பாதுகாப்புத் தொழில்துறை மேம்பாடு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இணக்கம் தெரிவித்துள்ளன.

இந்த முக்கிய முடிவு, நேற்று இந்தியாவின் புது டெல்லியில் நடைபெற்ற 12-ஆவது மலேசியா–இந்தியா இராணுவ ஒத்துழைப்பு துணைக் குழு (SCMC) கூட்டத்தில் எட்டப்பட்டது.

கோலாலம்பூரிலுள்ள இந்திய உயர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில்முறை பரிமாற்றங்களை அதிகரித்தல், இராணுவப் பயிற்சி திட்டங்களில் விரிவான பங்கேற்பு, மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரண (HADR) நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுதல் ஆகியவற்றிலும் இரு நாடுகளும் உடன்பாடு கண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இராணுவப் பரிமாற்றங்கள், கூட்டுப் பயிற்சிகள், அதிகாரிகள் மட்ட ஆலோசனைகள், திறன் மேம்பாடு, கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு, உருவெடுத்து வரும் புதிய பாதுகாப்புத் துறைகள் ஆகியவற்றில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை இரு தரப்பினரும் வரவேற்றதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்துக்கு, இந்திய பாதுகாப்பு அமைச்சின் கூட்டுச் செயலாளர் ஸ்ரீ அமிதாப் பிரசாத், மலேசிய ஆயுதப் படையின் (ATM) செயல்பாடு, பயிற்சி பிரிவின் உதவி தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அமர் மஹ்முத் அப்துல் ரஹ்மான் ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர்.

இதனுடன், ASEAN பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் பிளஸ் (ADMM-Plus) அமைப்பின் கீழ் தொடரும் ஒத்துழைப்பையும் இரு நாடுகளும் பாராட்டியதுடன், சர்வதேச சட்டங்களுக்கு இணங்க இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை, கடல் வழிப் போக்குவரத்து சுதந்திரத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தின.

இதற்கிடையில், 11-ஆவது இந்திய கடற்படை - மலேசிய அரச கடற்படை (TLDM) பணியாளர் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இதில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு, ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மலேசியா - இந்தியா இடையிலான முக்கிய இராணுவ ஆலோசனை அமைப்பாக விளங்கும் SCMC, இரு நாடுகளின் பாதுகாப்புச் செயலாளர் மட்ட பாதுகாப்பு ஒத்துழைப்புக் கூட்டத்திற்கான முக்கிய முன்னேற்பாட்டு தளமாகவும் செயல்பட்டு வருகிறது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset