நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முற்போக்கான ஊதியக் கொள்கை; 4,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

முற்போக்கான ஊதியக் கொள்கையின் கீழ், நாட்டின் தனியார் துறையைச் சேர்ந்த 4,025 நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தி, அரசின் கொள்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் வாயிலாகச் சுமார் 51,363 ஊழியர்கள் பயனடைந்துள்ளதோடு, அவர்களுக்கான ஊக்கத்தொகையாக 64.07 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த எழுத்துப்பூர்வமான பதிலில் குறிப்பிட்டார்.

கடந்த ஜூன் 5, 2026 நிலவரப்படி, இந்த ஊதிய உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரின் கேள்விக்கு விளக்கமளித்த அமைச்சர், மொத்த மற்றும் சில்லறை வணிகம், உற்பத்தித் துறை, தொழில்முறை மற்றும் தொழில்நுட்பச் சேவைகள், கல்வி, மற்றும் உணவு-பானங்கள் சேவைத் துறைகள் இத்திட்டத்தில் அதிகளவில் பங்கேற்றுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

இதில் ஊக்கத்தொகை பெறும் நிறுவனங்களில் பாதிக்கும் மேலானவை (50.2 சதவீதம்) சிறு நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இத்திட்டத்தின் மூலம் பலன் பெற்றவர்களில் 45.9 சதவீதம் பேர் திறன்மிக்க பணியாளர்கள் ஆவர்.

இதில் தொழில்முறை பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்குவர்.

அரசாங்கத்தின் இந்த ஊக்கத்தொகை, உள்ளூர் நிறுவனங்கள் தங்களின் திறன்மிக்க பணியாளர்களுக்குச் சிறந்த ஊதியத்தை வழங்க நேரடியாக ஊக்கமளிப்பதாக அமைச்சர் ரமணன் தெரிவித்தார்.

இதன் விளைவாக, தொழில்முறை பணியாளர்களின் சராசரி அடிப்படைச் சம்பளம் 12.4 சதவீதமும், தொழில்நுட்ப வல்லுநர்களின் ஊதியம் 12.4 சதவீதமும் உயர்ந்துள்ளது.

ஜி.எல்.சி, பன்னாட்டு நிறுவனங்கள் அல்லாத, உள்ளூர் நிறுவனங்களை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படும் இத்திட்டம், குறைந்தபட்ச ஊதியத்திற்கு மேல் வருமானம் ஈட்டும் தகுதி வாய்ந்த மலேசிய குடிமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்று அவர் மேலும் விவரித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset