செய்திகள் மலேசியா
மலேசிய இந்து சமய வரலாற்றில் புதிய அத்தியாயமாக தேசிய திருமுருகன் மாநாடு; ஈப்போவில் நடைபெறுகிறது: டத்தோ சிவநேசன்
ஈப்போ:
மலேசிய இந்து சமய வரலாற்றில் புதிய அத்தியாயமாக தேசிய திருமுருகன் மாநாடு ஈப்போவில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் இதனை கூறினார்.
மலேசிய இந்து சமூகத்தின் ஆன்மிக, சமய மற்றும் பண்பாட்டு வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமையவுள்ள தேசிய திருமுருகன் மாநாட்டிற்கான அறிமுக விழா இன்று ஈப்போ எக்ஸெல்சியர் ஹோட்டலில் மாநில அரசின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றது.
பேரா மாநில மனிதவளம், சுகாதாரம், இந்தியர் சமூக நலன், தேசிய ஒருமைப்பாட்டுத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் ஆச்சலிங்கம் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
மேலும் இந்த நிகழ்வில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்து சமய அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆலய நிர்வாகிகள், தமிழ் அமைப்புகளின் தலைவர்கள், கல்வியாளர்கள், சமூகப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
முருகப் பெருமானின் வழிபாடு என்பது தமிழர்களின் சமய அடையாளம் மட்டுமல்ல.
அது மொழி, பண்பாடு, ஒழுக்கம், ஒற்றுமை, வாழ்வியல் நெறிகளை தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லும் மகத்தான பாரம்பரியமாகும்.
இதன் அடிப்படையில் தான் தேசிய திருமுருகன் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாநாடு வரும் ஜூலை 25, 26ஆம் தேதிகளில் ஈப்போ கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.
இம்மாநாடு ஒரு சாதாரண சமய நிகழ்ச்சி அல்ல.
இது முருக வழிபாட்டின் வரலாறு, தமிழ் இலக்கியங்களில் முருகப் பெருமானின் மகத்துவம், ஆலய மரபுகள், சமுதாய ஒற்றுமை, இளைஞர்களின் ஆன்மிக விழிப்புணர்வை ஒருங்கிணைக்கும் தேசிய அறிவுசார் மாநாடாக அமையும் என்று டத்தோ சிவநேசன் வலியுறுத்தினார்.
மலேசியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் இணைக்கும் வகையில் நடைபெறவுள்ள இம்மாநாடு, இந்து சமய அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆலய நிர்வாகிகள் மற்றும் முருக பக்தர்களை ஒரே மேடையில் ஒன்றிணைத்து கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ளும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாக இருக்கும்.
மேலும், இந்திய சமூகத்தின் சமய, பண்பாட்டு மரபுகளை பாதுகாப்பதற்கும், அவற்றை இளைய தலைமுறையினரிடம் அறிவியல் அடிப்படையில் கொண்டு சேர்ப்பதற்கும் பேரா மாநில அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் டத்தோ அ. சிவநேசன் கூறினார்.
இந்த மாநாட்டின் மூலம் முருக வழிபாட்டின் தோற்றம், ஆறுபடை வீடுகளின் தத்துவம், தமிழ் இலக்கியங்களில் முருகன், உலக நாடுகளில் முருக வழிபாட்டின் பரவல், சமகால சமூகத்தில் ஆன்மிகத்தின் பங்கு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் சிறப்பு சொற்பொழிவுகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வு, மலேசிய இந்து சமூகத்தின் சமய ஒற்றுமையையும், தமிழர் பண்பாட்டு மரபின் பெருமையையும் உலக அரங்கில் எடுத்துரைக்கும் முக்கிய முயற்சியாக அமையும் என்ற நம்பிக்கையையும் நிகழ்வில் பங்கேற்றவர்கள் வெளிப்படுத்தினர்.
தேசிய திருமுருகன் மாநாட்டிற்கான முழுமையான நிகழ்ச்சி நிரல், பங்கேற்பாளர்கள் பதிவு, ஆய்வரங்கங்கள், சிறப்பு அமர்வுகள் தொடர்பான விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்த அறிமுக விழா, தேசிய அளவில் நடைபெறவுள்ள திருமுருகன் மாநாட்டுக்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்ததோடு, மலேசிய தமிழர், இந்து சமூகத்தின் ஆன்மிக எழுச்சிக்கான புதிய தொடக்கமாகவும் அமைந்தது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2026, 12:03 am
நஜிப்பின் விடுதலையில் ஜொகூர் தேசிய முன்னணி தலையிட முடியாது: டத்தோ முருகையா
July 4, 2026, 5:46 pm
