நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இ-வாலட் மோசடிக்கு கடும் கட்டுப்பாடு, பாதுகாப்பில் தவறினால் 7 நாட்களுக்குள் முழு இழப்பீடு வழங்க வேண்டும்: அன்வார்

கோலாலம்பூர்: 

மலேசிய தேசிய வங்கி (BNM) நிர்ணயித்துள்ள மோசடி தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்தத் தவறும் தகுதியான இ-வாலட் சேவை வழங்குநர்கள், மோசடியில் சிக்கிய வாடிக்கையாளர்களுக்குப் புகார் கிடைத்த ஏழு வேலை நாட்களுக்குள் முழுமையான இழப்பீட்டை வழங்குவது கட்டாயம் என்று பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் அலட்சியமும் ஓரளவு காரணமாக இருந்தாலும், பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றத் தவறிய இ-வாலட் நிறுவனங்கள் முழுப் பொறுப்பையும் ஏற்று இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மலேசியாவில் இணையப் பணப் பரிவர்த்தனைகளின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்தி, டிஜிட்டல் பொருளாதாரத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை உயர்த்தும் அரசாங்கத்தின் விரிவான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைகிறது என்று அன்வார் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இணைய வங்கி சேவைகள், இ-வாலட் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட டிஜிட்டல் கட்டணச் சேவைகளுக்கான பாதுகாப்பு கட்டமைப்பை, மலேசிய தேசிய வங்கி தொடர்ந்து மேம்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மோசடி அபாயத்தைக் குறைக்கும் நோக்கில், வங்கிகள், இ-பண சேவை வழங்குநர்களுக்குப் பல்வேறு புதிய பாதுகாப்பு நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அவற்றில் வலுவான பரிவர்த்தனை அங்கீகார முறை, அதிக ஆபத்துள்ள பரிவர்த்தனைகளுக்கு 'Cooling-off Period', ஒரே பதிவு செய்யப்பட்ட சாதனத்தில் மட்டுமே கணக்கு சரிபார்ப்பு, பிரத்யேக மோசடி உதவி அழைப்பு மையங்கள், மோசடி சந்தேகம் ஏற்பட்டவுடன் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கை உடனடியாக முடக்க உதவும் 'Kill Switch' வசதி ஆகியவை அடங்கும்.

மேலும், இணைய நிதி மோசடிகளை விரைவாக கையாளும் தேசிய மோசடி பதில் மையம் (National Scam Response Centre – NSRC) மூலம் அமலாக்க நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை, National Fraud Portal அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், மோசடியில் பறிபோன பணத்தை விரைவாகக் கண்டறிந்து முடக்கும் செயல்முறை தானியக்கமாக்கப்பட்டுள்ளதால், சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை மிக வேகமாக அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என அன்வார் தெரிவித்தார்.

இதனுடன், அங்கீகரிக்கப்படாத மின்னணு வங்கி பரிவர்த்தனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான பாதுகாப்பை உறுதி செய்யும் (SEFT) கொள்கையையும், 2024ஆம் ஆண்டு மலேசிய தேசிய வங்கி மேலும் வலுப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset