செய்திகள் மலேசியா
1.73 டிரில்லியன் ரிங்கிட்டை எட்டும் மலேசிய வீட்டுக் கடன்: அன்வார்
கோலாலம்பூர்:
மலேசியாவின் வீட்டுக் கடன், 2026 மார்ச் மாத இறுதியில் 1.73 டிரில்லியன் ரிங்கிட்டாக பதிவாகியுள்ளதாகவும், இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)-யில் 84.4 சதவீதம் எனவும் பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் இந்த விகிதம் 84.7 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது அது சற்றே குறைந்திருப்பது நேர்மறையான முன்னேற்றமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மலேசிய தேசிய வங்கியின் (Bank Negara Malaysia) ஒத்துழைப்புடன், குடும்பங்களின் கடன் நிலை, கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன், உலகளாவிய பொருளாதார சூழ்நிலைகள் ஆகியவற்றை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், எதிர்கால பொருளாதார அதிர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மக்களின் நிதி நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அன்வார் விளக்கினார்.
2025 டிசம்பர் மாத நிலவரப்படி, திருப்பிச் செலுத்தப்படாத குடும்பக் கடன்களின் (Impaired Household Loans) விகிதம் வெறும் 1 சதவீதமாக மட்டுமே பதிவாகியுள்ளது. இது 2025 ஜூன் மாதத்தில் பதிவான 1.1 சதவீதத்தை விட குறைவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், குடும்பங்களின் கடனைச் செலுத்தும் திறன் தொடர்ந்து வலுவாக இருப்பதற்கான அறிகுறியாக, கடன் சேவை விகிதம் (Debt Service Ratio - DSR) 33 சதவீதமாக உள்ளதாகவும், கடன்-வருமான விகிதம் (Debt-to-Income Ratio) 1.3 மடங்காக நிலைத்திருப்பதும் வருமான வளர்ச்சி தொடர்வதை பிரதிபலிப்பதாகவும் அவர் கூறினார்.
"ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, மலேசிய குடும்பங்கள் தங்களின் கடன் பொறுப்புகளை நிறைவேற்றும் திறனை இன்னும் வலுவாகக் கொண்டுள்ளன," என்று அன்வார் வலியுறுத்தினார்.
குடும்பக் கடன் வளர்ச்சி கட்டுப்பாட்டுக்குள் இருப்பதையும், கடன் வாங்குபவர்களின் திருப்பிச் செலுத்தும் திறனுக்கு ஏற்ப மட்டுமே அது அதிகரிப்பதையும் உறுதி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக நிதிச் சுமையை எதிர்கொள்ளும் தனிநபர்கள், தொழில் நிறுவனங்களுக்கு, வங்கிகள் மூலம் கடன் மறுசீரமைப்பு, தவணை மறுநிர்ணயம், தற்காலிக தவணை ஒத்திவைப்பு உள்ளிட்ட இலக்கு அடிப்படையிலான நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்கள் தங்களது நிதி நிலைக்கு ஏற்ற தீர்வுகளைப் பெற, தாமதிக்காமல் தங்களது வங்கிகளை அணுகி ஆலோசனை பெறுமாறும் அன்வார் அறிவுறுத்தினார்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
July 5, 2026, 12:03 am
நஜிப்பின் விடுதலையில் ஜொகூர் தேசிய முன்னணி தலையிட முடியாது: டத்தோ முருகையா
July 4, 2026, 5:46 pm
