செய்திகள் மலேசியா
சோகத்தில் முடிந்த தேடுதல்: காணாமல் போன 6 வயது ஆட்டிசம் சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்க்கப்பட்டான்
ஈப்போ:
பேராக் மாநிலம் ஹூத்தான் மெலிந்தாங் அருகே காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட ஆறு வயது ஆட்டிசம் சிறுவன், பல மணி நேர தேடுதல் நடவடிக்கைக்குப் பின்னர் எண்ணெய்ப் பனைத் தோட்டப் பகுதியில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேராக் மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அஹம்மத், நேற்று மாலை 6.24 மணியளவில் சிறுவன் காணாமல் போனதாக காவல்துறையிடமிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, ஹூத்தான் மெலிந்தாங் தீயணைப்பு, மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்ததாக தெரிவித்தார்.
சிறுவன் வீட்டில் இல்லாததையும், முன் கதவு திறந்திருந்ததையும் கவனித்த அவரது தந்தை, முதலில் வீட்டைச் சுற்றியும் அருகிலுள்ள எண்ணெய்ப் பனைத் தோட்டத்திலும் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் காவல்துறையில் புகார் அளித்ததாக அவர் தெரிவித்தார்.
தேடுதல், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று இரவு 10.08 மணியளவில், எண்ணெய்ப் பனைத் தோட்டத்தில் உள்ள வடிகால் பள்ளத்தில் சிறுவனைக் கிராம மக்கள் கண்டுபிடித்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த தடயவியல் அதிகாரிகள், சிறுவன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.
உடல் மேலதிக விசாரணைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், இரவு 11 மணியளவில் தேடுதல் நடவடிக்கை நிறைவடைந்தது.
இதனிடையே, பாகான் டத்தோக் மலேசிய குடிமைப் பாதுகாப்புப் படை (APM) வெளியிட்ட தகவலின்படி, உயிரிழந்த சிறுவர் ஆட்டிசம் கொண்ட மாற்றுத்திறனாளி (OKU) ஆவார். அவரது வீட்டிலிருந்து சுமார் 330 மீட்டர் தொலைவில் உடல் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
July 5, 2026, 12:03 am
நஜிப்பின் விடுதலையில் ஜொகூர் தேசிய முன்னணி தலையிட முடியாது: டத்தோ முருகையா
July 4, 2026, 5:46 pm
