நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இன்று முதல் வணிக வாகன ஓட்டுநர்களுக்கு மானியத்துடன் கூடிய சுகாதாரப் பரிசோதனை திட்டம் அமல்: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

வணிக வாகன ஓட்டுநர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும், அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள மானியத்துடன் கூடிய சுகாதாரப் பரிசோதனைத் திட்டம் இன்று முதல் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகிறது.

40 முதல் 59 வயதுக்குட்பட்ட வணிக வாகன மற்றும் பொதுப் போக்குவரத்து வாகன ஓட்டுநர்கள், ‘பெமாண்டு சிஹாட் டான் செலாமட்’ (பி.எஸ்.எஸ்.) எனும் இந்தத் திட்டத்தின் கீழ் வெறும் 30 ரிங்கிட் கட்டணத்தில் முழுமையான மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ளலாம்.

பொதுவாக இதுபோன்ற பரிசோதனைகளுக்கு 80 ரிங்கிட் முதல் 100 ரிங்கிட் வரை செலவாகும் நிலையில், மீதமுள்ள தொகையை அரசாங்கமும் பெர்கெசோவும் மானியமாக வழங்குகின்றன.

பேருந்து, லாரி ஓட்டுநர்கள் போன்ற தொழில்முறை உரிமம் வைத்திருப்பவர்கள் மற்றும் பெர்கெசோவில் செயலில் உள்ள உறுப்பினர்களாக இருக்கும் ஓட்டுநர்கள் மட்டுமே இந்தச் சலுகையைப் பெறத் தகுதியுடையவர்கள்.

இந்தப் பரிசோதனையில் உடல் பரிசோதனை, கண்பார்வை, கேட்கும் திறன் சோதனை, தூக்கக் கோளாறு பரிசோதனை, இதயம், சுவாச மண்டலம், நரம்பியல் தொடர்பான மதிப்பீடுகள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கான (HbA1c) பரிசோதனை ஆகியவை அடங்கும்.

இந்தத் திட்டம் குறித்து மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறுகையில், அதிகப்படியான சோர்வு, தூக்கக் கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் விழிப்புணர்வை வெகுவாகக் குறைத்து விபத்துகளுக்குக் காரணமாகின்றன என்று குறிப்பிட்டார்.

எனவே, ஓட்டுநர்களுக்குச் சுமையை ஏற்படுத்துவதை விட, ஆரம்ப நிலையிலேயே உடல்நலப் பிரச்சனைகளைக் கண்டறிந்து உரிய சிகிச்சை பெற உதவுவதே இதன் நோக்கம் என்றார்.

போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் பேசுகையில், ஓட்டுநர்களின் ஆரோக்கியத்தை வெறும் தனிநபர் சார்ந்த விஷயமாகப் பார்க்காமல், பொதுப் பாதுகாப்பின் ஒரு அங்கமாகப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள், சாலைப் போக்குவரத்துத் துறையின் (ஜே.பி.ஜே) ‘MySikap’ அமைப்பில் நேரடியாகப் பதிவேற்றப்படும் என்பதால், உரிமம் புதுப்பிக்கும்போது ஓட்டுநர்கள் இனி காகித வடிவிலான மருத்துவ அறிக்கைகளைத் தனியாகச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. இது நிர்வாகச் சுமையைக் குறைப்பதுடன், செயல்முறையை விரைவுபடுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் மட்டும் பணியிட விபத்துகளால் உயிரிழந்த ஊழியர்களில், சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் 22 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதாக பெர்கெசோ தரவுகள் தெரிவிக்கின்றன.

இதில் லாரி ஓட்டுநர்களின் உயிரிழப்பு விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இதனைத் தடுக்கும் நோக்கில் முதற்கட்டமாக ஆறு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்காக, சுமார் 30,000 ஓட்டுநர்கள் பயனடையும் வகையில் 12.4 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ள 500 கிளினிக்குகள் மூலம் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் நிலையில், எதிர்காலத்தில் அதன் எண்ணிக்கை 3,000-ஆக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset