நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடிவரவு தடுப்பு முகாம்களில் ஐந்து ஆண்டுகளில் 465 உயிரிழப்புகள்: உள்துறை அமைச்சர்

கோலாலம்பூர்: 

கடந்த 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில், நாடு முழுவதும் உள்ள குடிவரவு தடுப்பு முகாம்களில் (Depot Imigresen) மொத்தம் 465 தடுத்து வைக்கப்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசூத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

அதே காலப்பகுதியில் 3,49,856 பேர் தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்ட நிலையில், உயிரிழப்பு விகிதம் 0.13 சதவீதமாக பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
உயிரிழந்தவர்களில் 393 பேர் ஆண்கள் (84.5%), 60 பேர் பெண்கள், மேலும் 12 குழந்தைகள் அடங்குகின்றனர். அந்தக் குழந்தைகளில் எட்டு ஆண் குழந்தைகளும், நான்கு பெண் குழந்தைகளும் இடம்பெற்றுள்ளனர்.

குடியுரிமை அடிப்படையில், பிலிப்பைன்ஸ் நாட்டவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டைச் சேர்ந்த 222 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்தோனேசியா (109 பேர்), மியான்மர் (61 பேர்) இடம்பெறுகின்றனர். மீதமுள்ள உயிரிழப்புகள் வங்காளதேசம், இந்தியா, தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, சீனா, பாகிஸ்தான், ஈராக், ஈரான், போட்ஸ்வானா, வெனிசுலா, புரூணை, பாலஸ்தீனம், சிரியா, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களையும், குடியுரிமையற்ற நபர்களையும் உள்ளடக்கியதாகும்.

நாடாளுமன்றத்தில் வோங் சென் (PH–சுபாங்) எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், உயிரிழப்புகளுக்கான முக்கிய காரணங்களாக செப்சிஸ் (Sepsis), செப்டிக் ஷாக், சுவாச நோய்கள், இதய, இருதயக் குழாய் நோய்கள், செரிமான, கல்லீரல் நோய்கள், எச்.ஐ.வி./எய்ட்ஸ், லெப்டோஸ்பைரோசிஸ், மூளைக்காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் இருந்ததாக விளக்கினார்.

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, குடிவரவுத் துறை (JIM) தடுப்பு முகாம்களின் நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்த பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அவற்றில், தடுப்புக் காவலுக்கு வருவோருக்கான ஆரம்ப மருத்துவப் பரிசோதனை, வழக்கமான உடல்நல கண்காணிப்பு, ஒழுங்குமுறை மருத்துவப் பதிவுகள், தொற்றுநோயாளிகள், மனநல அவசரநிலை கைதிகளைத் தனிமைப்படுத்துதல், தேவைப்படும் நேரங்களில் உடனடி மருத்துவமனை பரிந்துரை ஆகியவை இடம்பெறுகின்றன.

மேலும், தடுத்து வைக்கப்பட்டவர்களுக்குச் சுகாதாரப் பொருட்கள், ஆடைகள், போர்வைகள் வழங்கப்படுவதுடன், வாரத்திற்கு குறைந்தது ஒருமுறையாவது வெளிப்புற உடற்பயிற்சிக்கான அனுமதியும் வழங்கப்படுவதாக அவர் கூறினார். அதோடு, தொலைபேசி, கடிதம் அல்லது அனுமதியுடன் குடும்பச் சந்திப்பு மூலம் உறவினர்களுடன் தொடர்பு கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

உணவின் தரத்தை உறுதி செய்வதற்காக உணவு மாதிரிகள் முறையாக பரிசோதிக்கப்படுவதுடன், பாதுகாப்பான, தரநிலைக்கு ஏற்ப உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய கடுமையான கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset