நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜூன் 6 வரை 11,000-ஐத் தாண்டிய காசநோய் பாதிப்பு: விழிப்புணர்வைத் தீவிரப்படுத்தும் சுகாதார அமைச்சு

கோலாலம்பூர்: 

மலேசியாவில் இவ்வாண்டு ஜூன் 6 வரை 11,257 காசநோய் (TB) பாதிப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 4.4 விழுக்காடு அதிகரிப்பு என்றாலும், நோயின் நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் இருப்பதாக அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மட் தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 10,779 பாதிப்புகள் பதிவாகியிருந்த நிலையில், இவ்வாண்டு 478 புதிய பாதிப்புகள் அதிகரித்துள்ளன. நோயாளிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உடனடியாக சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதன் விளைவாகவே இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

அதேவேளை, காசநோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. ஜூன் 6 வரை 492 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், கடந்த ஆண்டு இதே காலத்தில் 856 உயிரிழப்புகள் பதிவாகியிருந்தது. இது 43.1 விழுக்காடு சரிவு என அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், காசநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதில் பல்வேறு சவால்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நோய்க்கிருமியின் நீண்ட அடைகாக்கும் காலம், அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வு பற்றாக்குறை, சமூக அவப்பெயர், சில பகுதிகளில் சுகாதார சேவைகளை எளிதில் அணுக முடியாத நிலை ஆகியவை முக்கிய தடைகளாக உள்ளன என்றார் அவர்.

அத்துடன், காசநோய்க்கான சிகிச்சை குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் நீடிப்பதாலும், மருந்துகளின் பக்கவிளைவுகளாலும் சில நோயாளிகள் சிகிச்சையை முழுமையாகப் பின்பற்றத் தவறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சிகிச்சையை இடைநிறுத்துவது, நோய் தொடர்ந்து பரவுவதற்கும், மருந்து-எதிர்ப்பு காசநோய் (DRTB) உருவாகும் அபாயத்தையும் அதிகரிக்கும் என்று எச்சரித்த அமைச்சர், இவ்வகை நோயாளிகளுக்கு இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும் சிக்கலான, அதிக செலவுடைய சிகிச்சை தேவைப்படுவதாகவும் வலியுறுத்தினார்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset