நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லயாங்-லயாங் தொகுதியில் உதயமானது புதிய விடியல்: மாற்றத்தை நோக்கி முழக்கமிடும் குணா பாலகிருஷ்ணன்

சிம்பாங் ரெங்கம்:

லயாங்-லயாங் மாநில சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய மாற்றத்தின் புதிய அத்தியாயத்தை எழுத, பக்காத்தான் ஹாராப்பான் வேட்பாளர் குணா பாலகிருஷ்ணன், துணிச்சலான தொலைநோக்குப் பார்வைகளுடன் களமிறங்கியுள்ளார்.

தொகுதியின் தேக்கமடைந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்கள் மையப்படுத்திய சுறுசுறுப்பான, செயல்திறன் மிக்க தலைமைத்துவத்தை வழங்க உறுதிபூண்டுள்ள அவர், இத்தேர்தலை லயாங்-லயாங்கின் எழுச்சிக்கான ஒரு பெரும் வாய்ப்பாகக் கருதுகிறார்.

தற்போதைய அரசியல் சூழலில், வாக்கு என்பது வெறும் அடையாளம் மட்டுமல்ல, அது தொகுதியின் எதிர்காலத்தை செதுக்கும் ஆயுதம் என்பதை வலியுறுத்திய குணா,

நம்பிக்கை கூட்டணி, மடானி அரசாங்கத்தின் இரட்டைப் பலத்துடன் லயாங்-லயாங்கை ஒரு வளர்ச்சிக்கான மையமாக மாற்றப் போவதாக முழக்கமிட்டுள்ளார்.

நேற்று காலை நடைபெற்ற வேட்புமனுத் தாக்கல், நம்பிக்கை கூட்டணியின் அசைக்க முடியாத மக்கள் பலத்தையும், மாற்றத்தை நோக்கிய அவர்களின் தீவிர தாகத்தையும் பறைசாற்றியது.

சுமார் 2,000-க்கும் மேற்பட்ட தொண்டர்களின் எழுச்சிகரமான ஆதரவோடு களமிறங்கிய குணா பாலகிருஷ்ணனுக்கு, கெஅடிலான் கட்சியின் தேசியத் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் வலுவான களம் அமைத்துக் கொடுத்துள்ளனர்.

மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ ரமணன், மடானி அரசாங்கத்தின் 'மக்களே முதன்மை' எனும் கொள்கையைச் சுட்டிக்காட்டி, எந்தவொரு தொகுதியும் வளர்ச்சியின் பாதையில் இருந்து விடுபட்டுப் போகக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

கூட்டாட்சி அரசாங்கத்தின் நேரடி ஒத்துழைப்புடன், லயாங்-லயாங்கின் பொருளாதாரத் தடைகளை உடைத்து, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளையும் சமூக நலத் திட்டங்களையும் மேம்படுத்த புதிய பாதையை வகுப்பதே தமது இலக்கு என அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின்படி, 25,181 வாக்காளர்களைக் கொண்ட லயாங்-லயாங் தொகுதியில், இம்முறை மும்முனைப் போட்டி அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.

தற்போதைய மற்றும் எதிரணிகளின் சவால்களைக் கடந்து, 'மாற்றமே லட்சியம், வளர்ச்சியே இலக்கு' என்ற முழக்கத்தோடு, தொகுதியின் அரசியல் வரைபடத்தில் புதிய வரலாற்றைப் படைக்க குணா பாலகிருஷ்ணன் மிகத் தீவிரமாகக் களம் கண்டுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset