நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநிலத் தேர்தல்; ஆட்சியாளர்கள் அமைப்பை மதிப்பதுடன் முதிர்ச்சியுடன் பிரச்சாரம் செய்ய வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

ஜொகூர்பாரு:

ஜொகூர் மாநிலத் தேர்தலில் ஆட்சியாளர்கள் அமைப்பை மதிப்பதுடன் முதிர்ச்சியுடன் அனைவரும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை வலியுறுத்தினார்.

ஜொகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு தற்போது பிரச்சாரங்கள் தொடங்கியுள்ளன.

இந்த தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும், ஒற்றுமை அரசாங்கத்திற்குள் உறவுகளைச் சீர்குலைக்கக்கூடிய அல்லது ஆட்சியாளர்கள் அமைப்பை அரசியல் களத்திற்குள் இழுக்கக்கூடிய அறிக்கைகளைத் தவிர்த்து, முதிர்ச்சியான, விவேகமான அரசியலைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒவ்வொரு கட்சிக்கும் பிரச்சாரம் செய்யவும், தத்தமது நிலைப்பாடுகளைப் பாதுகாக்கவும் உரிமை இருந்தாலும், நாட்டின் அரசியல் நல்லிணக்கத்தைப் பாதிக்கக்கூடிய ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிடாமலும், உணர்வுகளைத் தூண்டாமலும் இருக்க வேண்டும்.

இதில் அனைவரும்  பொறுப்புடன் செய்யப்பட வேண்டும்.

மாநிலத்தில் ஒன்றுக்கொன்று போட்டியிடும் பல கட்சிகள் ஒரே நேரத்தில் ஒற்றுமை அரசாங்கத்தின் மூலம் நாட்டை ஆள ஒன்றிணைந்து செயல்படும் ஒரு தனித்துவமான அரசியல் சூழலில் ஜொகூர் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல்கள் வரும் போகும், ஆனால் மக்களின் நலனுக்காக மத்திய அரசுக்குள்ளான பணி உறவுகள் தொடர வேண்டும்.

மத்திய அரசு ஒரு ஒற்றுமை அரசாக இருப்பதால், நாட்டை ஆள ஒன்றிணைந்து பணியாற்றுபவர்களின் உறவுகளில் சிக்கலையோ அல்லது பாதிப்பையோ ஏற்படுத்தக்கூடிய அறிக்கைகளை அனைத்துக் கட்சிகளும் வெளியிடாது என நான் நம்புகிறேன் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்








தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset