செய்திகள் மலேசியா
கைவிடப்பட்ட தொழிற்சாலையில் 135.63 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: 7 பேர் கைது
கோலாலம்பூர்:
செராஸில் உள்ள கைவிடப்பட்ட தொழிற்சாலை ஒன்றை எக்ஸ்டசி (Ecstasy), MDMA போதைப்பொருள் தயாரிப்பு ஆய்வகமாக பயன்படுத்தி வந்த கும்பலின் செயல்பாடு, கடந்த ஜூன் 20-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட 'ஒப்ஸ் ஹோரிடஸ்' (Ops Horitus) சிறப்பு சோதனையில் அம்பலமானது. இந்த நடவடிக்கையில் 135.63 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை (JSJN) இயக்குநர் டத்தோ ஹுசைன் ஒமர் கான், கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 55 வயதுக்குட்பட்ட ஆறு உள்ளூர் ஆண்கள், ஒரு வெளிநாட்டுப் பெண் எனத் தெரிவித்தார்.
முதல் சோதனையில், தாமான் செராஸ் உத்தமாவில் உள்ள வீட்டில் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், 26.40 கிலோகிராம் MDMA தூள் உட்பட 75.41 கிலோகிராம் எக்ஸ்டசி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து, புடு இம்பியான் IV பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த டொயோட்டா அல்பார்ட் வாகனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டதுடன், 5 கிராம் கெட்டமின் கைப்பற்றப்பட்டது.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, செராஸ் பாருவில் உள்ள கைவிடப்பட்ட தொழிற்சாலை ஒன்றில் போலிஸார் சோதனை மேற்கொண்டனர். அங்கு போதைப்பொருட்கள் தயாரித்து சேமித்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
அந்த இடத்தில் 95.80 கிலோகிராம் எக்ஸ்டசி மாத்திரைகள், 48.42 கிலோகிராம் MDMA தூள், 760 லிட்டர் MDMA திரவம் பறிமுதல் செய்யப்பட்டது.
மொத்தமாக 97.1 கிலோகிராம் எக்ஸ்டசி மாத்திரைகள், 47.12 கிலோகிராம் MDMA தூள், 760 லிட்டர் MDMA திரவம், 5 கிராம் கெட்டமின் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 135.63 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆரம்ப விசாரணையில், இந்தக் கும்பல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் செயல்பட்டு வந்ததாகவும், போதைப்பொருள் தயாரிப்பிற்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெற்று, பின்னர் உள்நாட்டு சந்தைக்கு விநியோகித்து வந்ததாகவும் போலிஸார் தெரிவித்தனர்.
சிறுநீர் பரிசோதனையில், ஆறாவது சந்தேகநபர் மட்டும் கெட்டமின் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியானது. மேலும், கைது செய்யப்பட்டவர்களில் இருவருக்கு ஏற்கனவே குற்ற, போதைப்பொருள் தொடர்பான பதிவுகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைக்காக, அனைத்து சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 26, 2026, 8:14 pm
புவாட் மீது ஒழுங்கு நடவடிக்கை இல்லை: ஜாஹித்
June 26, 2026, 4:28 pm
தங்கம் மீண்டும் 600 ரிங்கிட்டை எட்டுமா?: புதிய பொருளாதார ஊக்கிக்காக காத்திருக்கும் சந்தை
June 26, 2026, 3:34 pm
ஜோகூர் மாநில தேர்தல் வேட்புமனுத் தினத்திற்காக முக்கிய சாலைகளை காவல்துறை மூடுகிறது
June 26, 2026, 3:16 pm
