நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தங்கம் மீண்டும் 600 ரிங்கிட்டை எட்டுமா?: புதிய பொருளாதார ஊக்கிக்காக காத்திருக்கும் சந்தை

கோலாலம்பூர்: 

புவிசார் அரசியல் பதற்றம் மீண்டும் தீவிரமடைதல் அல்லது அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் (Fed) வட்டி விகிதங்களைக் குறைக்கும் நடவடிக்கையைத் தொடங்குதல் போன்ற புதிய காரணிகள் உருவானால் மட்டுமே, தங்கத்தின் விலை மீண்டும் ஒரு கிராமுக்கு 600 ரிங்கிட்டை எட்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

UniKL வணிகப் பள்ளியின் பொருளாதார ஆய்வாளர் இணைப் பேராசிரியர் டாக்டர் ஐமி சுல்ஹாஸ்மி அப்துல் ரஷித், புதிய ஊக்கிகள் உருவாகாத வரை, அடுத்த சில மாதங்களுக்குத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 540 முதல் 570 ரிங்கிட் வரையிலான வரம்பிலேயே நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 541 முதல் 543 ரிங்கிட் வரை உள்ளது. இது கடந்த ஜனவரியில் பதிவான 627.39 ரிங்கிட் என்ற உச்ச விலையை விட குறிப்பிடத்தக்க அளவில் குறைவாகும்.

அமெரிக்கா–ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் தோல்வியடைந்தாலோ அல்லது ஹோர்முஸ் ஜலசந்தியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டாலோ, பாதுகாப்பு முதலீடாக தங்கத்தின் மீதான தேவை அதிகரித்து, அதன் விலை வேகமாக உயரக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவதும், மலேசிய ரிங்கிட்டின் பலவீனமும், உலகளாவிய தங்க விலையில் பெரிய மாற்றம் இல்லாவிட்டாலும், உள்நாட்டு தங்க விலையை உயர்த்தும் முக்கிய காரணிகளாக அமையும் என்றார் அவர்.

ஜூன் மாதத்தில் ஏற்பட்ட சிறிய விலைச் சரிவு, நீண்டகால வீழ்ச்சியின் அறிகுறி அல்ல என்றும், ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட வலுவான உயர்வுக்குப் பிந்தைய இயல்பான சந்தை ஒருங்கிணைப்பு கட்டமே என்றும் அவர் விளக்கினார்.

மேற்கு ஆசியாவில் பதற்றம் தணிந்ததும், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்பில் எச்சரிக்கையான அணுகுமுறையைத் தொடர்ந்ததும், தங்கத்தின் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, உலக மத்திய வங்கிகளின் தொடர்ச்சியான தங்கக் கொள்முதல், உலகளாவிய கடன் சுமை, நீடித்துவரும் பணவீக்கம் ஆகியவை தங்கத்தின் நீண்டகால வளர்ச்சிக்குத் தொடர்ந்து வலுவான ஆதரவாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் மேற்கு ஆசியாவில் நிலைமை சீராக இருந்தால், உலக சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸுக்கு 4,000 முதல் 4,300 அமெரிக்க டாலர் வரை இருக்கும் என்றும், அதன்படி மலேசியாவில் ஒரு கிராமுக்கு சுமார் 565 முதல் 575 ரிங்கிட் வரை வர்த்தகம் செய்யப்படும் என்றும் அவர் கணித்துள்ளார்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset