செய்திகள் மலேசியா
ஆதரவற்ற நிலையில் தவித்த முதியவர்களின் கண்ணீரை துடைத்தது பீடோர் அன்பு இல்லம்
தெலுக் இந்தான்:
வாழ்க்கையின் சோதனைகளால் சோர்ந்துபோய், உறவினர்களின் ஆதரவையும் இழந்து தவித்துக் கொண்டிருந்த முதிய தம்பதியருக்கு, பீடோரில் செயல்பட்டு வரும் எச்கே அன்பு இல்லம் புதிய நம்பிக்கையை வழங்கியுள்ளது.
தெலுக் இந்தான் ஜாலான் பீடோர் கம்போங் 12ஆவது மைல் பகுதியில் வசித்து வந்த இராமைய்யா அப்பளசாமி (67), சரஸ்வதி கண்ணியப்பன் (61) ஆகியோர், பல ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வந்துள்ளனர். வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டதுடன், தங்களது அன்றாட வாழ்க்கையையே சுயமாக நடத்த முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், தாங்கள் நம்பியிருந்த சில உறவினர்களாலும், நெருங்கியவர்களாலும் ஊழியர் சேமநிதி மற்றும் வாழ்நாள் சேமிப்புப் பணங்கள் இழக்க நேரிட்டதாக மூதாட்டி சரஸ்வதி கண்ணீருடன் தெரிவித்தார்.
இதன் விளைவாக, தங்குவதற்கான நிரந்தர இடம்கூட இல்லாத நிலை உருவாகியதாகவும் அவர் கூறினார்.
ஒரு கட்டத்தில் உறவினரான மகேஸ்வரியின் இல்லத்தில் தற்காலிகமாக தங்கியிருந்த போதிலும், அக்குடும்பமும் பொருளாதாரம், குடும்பச் சவால்களை எதிர்கொண்டு வந்ததால், தாங்கள் மேலும் சுமையாக இருக்க விரும்பவில்லை என்று முடிவு செய்ததாக அவர் விளக்கினார்.
இதையடுத்து, எச்கே அன்பு இல்லத்தின் தோற்றுநர் கலைவேந்தன் மூக்கனை தொடர்புகொண்டு உதவி கோரியுள்ளனர்.
அவர்களின் நிலையை அறிந்த கலைவேந்தன் உடனடியாக உதவ முன்வந்ததுடன், அன்பு இல்ல நிர்வாகத்தினரை அனுப்பி முதிய தம்பதியரை பாதுகாப்பாக அங்கு அழைத்து வர ஏற்பாடு செய்தார்.
தற்போது எச்கே அன்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இருவருக்கும் தேவையான உணவு, மருத்துவ பராமரிப்பு, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக நடக்க முடியாத நிலையில் இருக்கும் இராமைய்யாவுக்கு ஊழியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர்.
முதியவர்கள் யாருக்கும் சுமை அல்ல. அவர்களை பாதுகாப்பதும், மரியாதையுடன் வாழ வழிவகை செய்வதும் சமூகத்தின் கடமை என்று கலைவேந்தன் மூக்கன் தெரிவித்தார்.
அன்பு இல்லத்தில் உள்ள அனைவரும் குடும்ப உறுப்பினர்களாகவே கருதப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஒரு காலத்தில் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட இந்த முதிய தம்பதியரின் வாழ்க்கையில், இன்று மீண்டும் நம்பிக்கையும் பாதுகாப்பும் மலர்ந்துள்ளது.
மனிதநேயமும் சமூக அக்கறையும் இன்னும் உயிருடன் இருப்பதை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.
இந்த தம்பதியருக்கு உதவ விரும்பும் உறவினர்கள் அல்லது பொதுமக்கள், பீடோரில் உள்ள எச்கே அன்பு இல்லத்தை நேரில் தொடர்புகொண்டு தங்களது பங்களிப்பை வழங்கலாம் என்றும் கலைவேந்தன் மூக்கன் அழைப்பு விடுத்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 30, 2026, 7:40 pm
ரோன் 95, ரோன் 97 பெட்ரோலின் விலைகள் 10 சென் குறைந்தது
June 30, 2026, 7:39 pm
ஜொகூரில் நிலையான ஆட்சி அமைவதில் இந்தியர்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது: குணராஜ்
June 30, 2026, 5:32 pm
நாளை முதல் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் மலேசிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்
June 30, 2026, 4:42 pm
