நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேம் ஹோபார்ட்டில் மீண்டும் பரபரப்பு: கனரக ஆயுதப் பயிற்சியின்போது இரு இராணுவ வீரர்கள் காயம்

குரூன்: 

கெடாவின் கேம் ஹோபார்ட்டில் மீண்டும் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பும் வகையில் மற்றொரு பயிற்சி விபத்து அரங்கேறியுள்ளது. கனரக ஆயுதப் பயிற்சியின்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெடித்துச் சிதறிய பொருளின் துண்டுகள் தாக்கியதில் இரண்டு இராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

கடந்த ஜூன் 16ஆம் தேதி இதே முகாமில் கையெறி குண்டு பயிற்சியின்போது ஏற்பட்ட வெடிப்பில் இரண்டு இராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் அடங்காத நிலையில், சுமார் இரண்டு வாரங்களுக்குள் நிகழ்ந்துள்ள இந்த இரண்டாவது விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கெடா காவல்துறைத் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா, நேற்று மாலை 6.05 மணியளவில் நடைபெற்ற பயிற்சியின்போது, 29 வயதுடைய கோப்பரல் தரப் பயிற்சியாளர் ஒருவர் இடது முழங்காலிலும், 35 வயதுடைய சார்ஜென்ட் தரப் பயிற்றுவிப்பாளர் ஒருவர் இடது தொடையிலும் காயமடைந்ததாக தெரிவித்தார்.
ஜூன் 28ஆம் தேதி தொடங்கிய பல்வேறு ஆயுதப் பயிற்சியில் மற்ற வீரர்களுடன் இணைந்து ஈடுபட்டிருந்தபோதே இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அவர் கூறினார்.

ஆரம்பகட்ட விசாரணையில், ஆயுதத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் துப்பாக்கிச் சூடு திடீரென நின்றுவிட்டதாகவும், பின்னர் ஆய்வு செய்யும் வேளையில் ஏற்பட்ட வெடிப்பில் கல் உள்ளிட்ட பொருட்களின் துண்டுகள் சிதறி வீரர்களைத் தாக்கியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனையில், இருவரின் காயங்களும் தோட்டாக்களால் ஏற்பட்டவை அல்ல; வெடிப்பால் சிதறிய பொருட்களின் தாக்கத்தினால் ஏற்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சார்ஜென்ட் சிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்ட நிலையில், கோப்பரல் தர வீரர் அதிக இரத்தப்போக்கு, நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக கெடா மாநில காவல்துறையின் தடயவியல் பிரிவினரும், இராணுவ அதிகாரிகளும் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு 1960ஆம் ஆண்டு ஆயுதச் சட்டம், பிரிவு 37-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், கடந்த ஜூன் 16ஆம் தேதி இதே முகாமில் இரண்டு இராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணை முழுமையாக இராணுவத்தின் பொறுப்பில் தொடர்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset