செய்திகள் மலேசியா
TURAP வெளிநாட்டு தொழிலாளர் ஆட்சேர்ப்பில் புதிய தனியார் ஏகபோகமா?: அரசிடம் 8 முக்கிய கேள்விகளை எழுப்பிய ஏழு எம்.பி.க்கள்
கோலாலம்பூர்:
வெளிநாட்டு தொழிலாளர் ஆட்சேர்ப்புக்காக முன்மொழியப்பட்டுள்ள Universal Recruitment Advanced Platform (TURAP) திட்டம், மலேசியாவின் தொழிலாளர் ஆட்சேர்ப்பு அமைப்பை மேலும் ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லும் அபாயம் இருப்பதாக பெட்டாலிங் ஜெயா, சுபாங், வங்சா மாஜூ, பாலிக் புலாவ், அம்பாங், சுங்கை சிப்புட், கோப்பேங் ஆகிய இடங்களின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் கவலை வெளியிட்டுள்ளனர்.
தற்போதுள்ள Foreign Workers Centralised Management System (FWCMS) தொடர்பாக பல நிர்வாகக் குறைபாடுகள், வெளிப்படைத்தன்மை பற்றிய கேள்விகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், அதே சூழலில் TURAP திட்டத்தை முன்னெடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. குறிப்பாக, Bestinet நிறுவனம் மீண்டும் வெளிநாட்டு தொழிலாளர் ஆட்சேர்ப்பு அமைப்பின் மையப் பங்கிற்குக் கொண்டு வரப்படுவது குறித்து அமைச்சரவை மக்களுக்குத் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூட்டு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவர்களின் கூற்றுப்படி, TURAP என்பது வெறும் தொழில்நுட்ப தளம் மட்டுமல்ல. வெளிநாட்டு தொழிலாளர் ஆட்சேர்ப்பு, முதலாளி-தொழிலாளர் பொருத்தம், குடிவரவு நடைமுறைகள், தொழிலாளர் உரிமைகள், ஆட்சேர்ப்பு செலவுகள், மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் தனிப்பட்ட தரவுகள் போன்ற முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய தேசிய அளவிலான அமைப்பாகும். எனவே, இத்தகைய திட்டம் பொதுமக்களின் பார்வைக்கு அப்பால் அல்லது திறந்த விவாதமின்றி அமல்படுத்தப்படக் கூடாது என்று அவர்கள் வலியுறுத்தினர்.
TURAP-இன் நோக்கம் இடைத்தரகர்களின் சுரண்டலைக் குறைத்து, தொழிலாளர்களை நேரடியாக முதலாளிகளுடன் இணைப்பதும், அதிகப்படியான ஆட்சேர்ப்பு கட்டணங்களை ஒழிப்பதும் எனக் கூறப்பட்டாலும், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் இல்லாமல், பழைய சுரண்டல் முறை புதிய டிஜிட்டல் வடிவில் தொடரும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்தனர்.
மேலும், பொதுக் கணக்குக் குழு (PAC), தேசிய தலைமைத் தணிக்கையாளர் அறிக்கைகள் FWCMS தொடர்பாக முன்வைத்திருந்த பல்வேறு குறைபாடுகளை அவர்கள் சுட்டிக்காட்டினர். அரசாங்கத்துடன் முறையான ஒப்பந்தமின்றி பல ஆண்டுகள் செயல்பட்டது, அரசு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இல்லாத 'சூப்பர் அட்மின்' அணுகல்கள், அனுமதியற்ற நபர்கள் விண்ணப்பங்களை அங்கீகரித்த விவகாரங்கள் போன்றவை இன்னும் மக்களின் நினைவில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், TURAP திட்டம் Bestinet நிறுவனத்துடன் நேரடி பேச்சுவார்த்தை மூலம் வழங்கப்பட்டதா, அல்லது திறந்த ஏல முறையில் தேர்வு செய்யப்பட்டதா என்பதையும் அரசாங்கம் விளக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மில்லியன் கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்களின் தரவுகளையும், நீண்டகால வருவாயையும் உள்ளடக்கிய தேசியத் திட்டம் திறந்த போட்டி, வெளிப்படையான கொள்முதல் நடைமுறையின் மூலமே செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி, TURAP திட்டம் 12 ஆண்டுகள் வரை அமல்படுத்தப்படலாம் என்றும், ஒவ்வொரு வெளிநாட்டு தொழிலாளருக்கும் சுமார் US$1,000 (ஏறத்தாழ 3,950 ரிங்கிட்) வரை கட்டணம் வசூலிக்கப்படுவதுடன், கூடுதலாக ஒரு மாத சம்பளத்துக்கு இணையான தொகையும் வசூலிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் உண்மையானதா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும், தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தும் திட்டம் மற்றொரு லாபகரமான தனியார் ஒப்பந்தமாக மாறக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
அத்துடன், TURAP திட்டம் UKAS கீழ் பொது-தனியார் கூட்டாண்மை (PPP) திட்டமாக செயல்படுத்தப்படுகிறதா என்பதையும், அவ்வாறு இருந்தால் அதன் ஒப்பந்த காலம், வருவாய் முறை, தரவு உரிமை, அபாயப் பகிர்வு, மதிப்பீட்டு ஆய்வு, பணத்திற்கு மதிப்பளிக்கும் (Value for Money) ஆய்வு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பொதுமக்களுக்கு வெளியிடப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், TURAP திட்டம் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டதா?, ஏன் புதிய அமைப்பு தேவைப்படுகிறது?, தொழிலாளர்களின் தரவுகளை யார் நிர்வகிப்பார்கள்?, அதிகப்படியான ஆட்சேர்ப்பு கட்டணங்களை எவ்வாறு தடுப்பது?, வெளிநாட்டு இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது?, உள்ளிட்ட எட்டு முக்கிய கேள்விகளுக்கு அரசாங்கம் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்றும் அந்த எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வெளிநாட்டு தொழிலாளர் ஆட்சேர்ப்பில் உண்மையான சீர்திருத்தம் அவசியம் என்பதை ஏற்றுக்கொண்ட அவர்கள், அது பல இடைத்தரகர்களை அகற்றி ஒரே தனியார் நிறுவனத்தின் ஆதிக்கத்தை உருவாக்கும் வகையில் இருக்கக் கூடாது என்று எச்சரித்தனர். வெளிப்படைத்தன்மை, போட்டித்தன்மை, அரசின் முழுமையான பொறுப்புக்கூறல், தொழிலாளர் நலனை மையமாகக் கொண்ட ஆட்சேர்ப்பு முறையே மலேசியாவுக்குத் தேவையான உண்மையான மாற்றம் என அவர்கள் வலியுறுத்தினர்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 30, 2026, 7:40 pm
ரோன் 95, ரோன் 97 பெட்ரோலின் விலைகள் 10 சென் குறைந்தது
June 30, 2026, 7:39 pm
ஜொகூரில் நிலையான ஆட்சி அமைவதில் இந்தியர்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது: குணராஜ்
June 30, 2026, 5:32 pm
நாளை முதல் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் மலேசிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்
June 30, 2026, 4:42 pm
