நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாளை முதல் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் மலேசிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்

கோலாலம்பூர்: 

மலேசியர்களின் வெளிநாட்டு பயணத்தை மேலும் எளிதாக்கும் முக்கிய முன்னெடுப்பாக, 18 வயது, அதற்கு மேற்பட்ட குடிமக்கள் நாளை முதல் 5 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் மலேசிய சர்வதேச கடவுச்சீட்டை (PMA) தங்களது தேவைக்கேற்ப தேர்வு செய்து விண்ணப்பிக்க முடியும்.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசூத்தியோன் இஸ்மாயில், இந்தப் புதிய தேர்வு முறை, வேலை, தொழில், கல்வி அல்லது குடும்ப காரணங்களுக்காக அடிக்கடி வெளிநாடு பயணம் மேற்கொள்பவர்களுக்கு பெரும் வசதியாக அமையும் என்று  தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகள் செல்லுபடியாகும் புதிய கடவுச்சீட்டின் கட்டணம் 350 ரிங்கிட் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அதே காலப்பகுதியில் இரண்டு முறை ஐந்தாண்டு கடவுச்சீட்டை புதுப்பிப்பதை ஒப்பிடுகையில் 50 ரிங்கிட் வரை சேமிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

"இந்தப் புதிய முயற்சி மக்களின் பயண வசதியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உலக அரங்கில் நம்பகத்தன்மையும் மதிப்பும் பெற்ற பயண ஆவணங்களில் ஒன்றாக மலேசிய கடவுச்சீட்டின் அந்தஸ்தை மேலும் வலுப்படுத்தும்," என அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு அம்சங்களிலும் புதிய கடவுச்சீடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது. முந்தைய பதிப்பில் இருந்த 49 பாதுகாப்பு அம்சங்கள் தற்போது 94 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. ஹோலோகிராம், புற ஊதா (UV) அச்சு, மறைபடம் (Latent Image) உள்ளிட்ட நவீன பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளதால், போலி தயாரித்தல், தகவல் மாற்றம், ஆவணத் துஷ்பிரயோக அபாயங்கள் கணிசமாகக் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய கடவுச்சீடு, ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள 71 கடவுச்சீட்டு அலுவலகங்களில் கட்டம் கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.

அதேவேளையில், தற்போது பயன்படுத்தி வரும் கடவுச்சீட்டை உடனடியாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும், அதன் செல்லுபடிக் காலம் நிறைவடையும் வரை வழக்கம்போல பயன்படுத்தலாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset