நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளிவாசல் வளாகத்தில் இரு சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்: 73 வயது முதியவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலாக்கா:

பள்ளிவாசல் வளாகத்தில் இரண்டு தொடக்கப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட 73 வயதுடைய முதியவர், இன்று அயர் கெரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அஸிஸ் முஹம்மத் @ தெஹ் எங் குவான் என்பவர், 2017ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம், பிரிவு 14(a)இன் கீழ் இரு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் பிரம்படி தண்டனையும் விதிக்கப்படலாம்.

கடந்த ஜூன் 15, ஜூன் 22 ஆகிய தேதிகளில், செமாபோக்கில் அமைந்துள்ள மஸ்ஜித் அல்-அப்ரார் பள்ளிவாசலின் சேமிப்பு அறை பகுதியில், முறையே 10, 8 வயதுடைய இரண்டு சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜரான குற்றஞ்சாட்டப்பட்டவர், இரு குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரினார். வழக்குத் தரப்பு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 25,000 ரிங்கிட் ஜாமீன் கோரி, வழக்கு முடியும் வரை பாதிக்கப்பட்ட சிறுமிகளை அணுகவோ, தொந்தரவு செய்யவோ கூடாது என்ற நிபந்தனையையும் முன்வைத்தது.

எனினும், குற்றஞ்சாட்டப்பட்டவர் நீண்டகால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதுடன், மன இறுக்கக் குறைபாடு (Autism) கொண்ட இளைய குழந்தையைப் பராமரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவரது தரப்பு வழக்கறிஞர், ஜாமீன் தொகையை குறைக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், 10,000 ரிங்கிட் ஜாமீனில் அவரை விடுவிக்க உத்தரவிட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களை அணுகக்கூடாது என்ற நிபந்தனையையும் விதித்தது. வழக்கின் அடுத்த விசாரணை, ஆவணங்கள் ஒப்படைக்கப்படுவதற்காக ஜூலை 29ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இரண்டு சிறுமிகளுக்கும் 5 ரிங்கிட் பணம், உடனடி நூடுல்ஸ் வழங்கி ஆசைகாட்டிய பின்னர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், பாதிக்கப்பட்ட சிறுமிகள் பள்ளி ஆலோசனை ஆசிரியரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து அம்பலமானது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset