நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரா அரசை அவதூறாக விமர்சித்த ஆடவருக்கு எதிராக நடவடிக்கை: டத்தோ சிவநேசன்

ஈப்போ:

பேரா மாநில அரசாங்கத்தை அவதூறாக டிக் டாக்கில் விமர்சித்த நபர் மீது போலிசில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் இதனை தெரிவித்தார்.

அந்த நபர், துங்கு பைனுன் மருத்துவமனை முன்புள்ள பிரதான சாலையில் இரு புறமும் வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், விதிமீறி நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு போலிசார் அபராதம் விதித்ததைத் தொடர்ந்து மாநில அரசையும் அதிகாரிகளையும் கடுமையாக அந்த நபர் விமர்சித்துள்ளதாக டத்தோ சிவநேசன் கூறினார்

இது கருத்துச் சுதந்திரத்தின் பெயரில் செய்யப்பட்ட விமர்சனம் அல்ல; மாநில அரசையும் அதன் நிர்வாகத்தையும் அவமதிக்கும் வகையிலான அவதூறான பதிவு.

இதுகுறித்து போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பேரா மாநிலத்தின் முக்கிய மருத்துவமனையான துங்கு பைனுன் மருத்துவமனை, மலேசியாவின் மூன்றாவது பெரிய மருத்துவமனையாகும்.
140 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட இம்மருத்துவமனையில் 5,135 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.

மருத்துவமனையில் தற்போது மொத்தம் 1,323 வாகன நிறுத்துமிடங்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் 645 இடங்கள் பணியாளர்களுக்காகவும், 678 இடங்கள் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் குடும்பத்தினருக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

1,173 படுக்கைகள் கொண்ட இம்மருத்துவமனையின் பயன்பாட்டு விகிதம் தினமும் 85 விழுக்காட்டுக்கும் மேல் இருப்பதாகவும், தினசரி ஆயிரக்கணக்கான நோயாளிகள், பார்வையாளர்கள் வருகை தருவதால் வாகன நிறுத்துமிட பற்றாக்குறை நீண்டகால பிரச்சினையாக இருந்து வருவதாகவும் அவர் விளக்கினார்.

இது எங்களுக்கும் தெரிந்த பிரச்சினை. பழமையான மருத்துவமனைகள் என்பதால் இடவசதி குறைபாடு உள்ளது.

எனினும், தனியார் நிர்வாகத்தின் மூலம் வாகன நிறுத்துமிடங்களை மறுசீரமைத்து கூடுதல் இடங்களை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset