செய்திகள் மலேசியா
நிலவுக்கு மலேசியர்களை அனுப்பும் திட்டம் இல்லை; விண்வெளி பொருளாதாரமே அரசின் இலக்கு: சாங் லி காங்
கோலாலம்பூர்:
ஆர்ட்டெமிஸ் (Artemis Accords) உடன்படிக்கையில் மலேசியா இணைந்திருப்பது, மலேசியர்களை நிலவுக்கு அனுப்பும் நோக்கத்திற்காக அல்ல என்று அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சர் சாங் லி காங் தெளிவுபடுத்தியுள்ளார்.
2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உடன்படிக்கையில் இணைந்திருந்தாலும், தற்போது மலேசியர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான எந்தவொரு குறிப்பிட்ட திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என அவர் தெரிவித்தார்.
இருப்பினும், எதிர்காலத்தில் நாட்டின் விண்வெளி வீரர்களைப் பூமியின் சுற்றுப்பாதைக்கோ அல்லது நிலவுக்கோ அனுப்பும் வாய்ப்பை அரசாங்கம் முற்றிலும் நிராகரிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
“அத்தகைய விண்வெளிப் பயணத் திட்டம் மேற்கொள்ளப்பட வேண்டுமெனில், அதன் அறிவியல் பயன், நாட்டிற்குக் கிடைக்கும் மூலோபாய, பொருளாதார நன்மைகள், அதேபோல் நாட்டின் நிதிநிலை ஆகியவை ஆழமாக மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரே முடிவு எடுக்கப்படும்,” என்று நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய அரசின் முக்கிய கவனம், நாட்டிற்கு நேரடி பொருளாதார பலன் அளிக்கும் விண்வெளி தொழில்நுட்பம், செயற்கைக்கோள் உற்பத்தி, கருவி வடிவமைப்பு, விண்வெளி உள்கட்டமைப்பு மேம்பாட்டில் மலேசிய நிபுணர்களின் பங்களிப்பை வலுப்படுத்துவதாகும் என்றும் அவர் கூறினார்.
அமைச்சரின் விளக்கத்தின்படி, ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கை என்பது நிலவு, செவ்வாய், வால்மீன்கள், சிறுகோள்களை அமைதியான நோக்கங்களுக்காக ஆராய்ந்து பயன்படுத்துவதற்கான கொள்கைகள், வழிகாட்டுதல்களின் தொகுப்பாகும்; இது விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் அல்ல.
ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் இணைந்ததன் மூலம், 2050ஆம் ஆண்டளவில் அமெரிக்க டொலர் 127 பில்லியன் மதிப்பை எட்டும் என கணிக்கப்படும் ‘நிலவுப் பொருளாதாரத்தில்’ (Lunar Economy) மலேசிய நிறுவனங்கள் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நுண் செயற்கைக்கோள் உற்பத்தி, அரைக்கடத்தி (Semiconductor) தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு (AI), உயர் துல்லிய உணரி (Sensor) அமைப்புகள் உள்ளிட்ட துறைகள் இதன் மூலம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சி, தேசிய விண்வெளிக் கொள்கை 2030 (DAN2030)-இன் இலக்குகளுடன் ஒத்துப்போகிறது. அதன்படி, 2030ஆம் ஆண்டுக்குள் விண்வெளித் துறை மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (GDP) 10 பில்லியன் ரிங்கிட் அல்லது 1% பங்களிப்பை வழங்குவதோடு, 5,000 உயர்திறன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இலக்கை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது.
உலகளாவிய விண்வெளிச் சந்தையில் போட்டியிடும் திறன் கொண்ட மலேசிய விண்வெளித் தொழில்முனைவோரை உருவாக்குவதே அரசின் நீண்டகால நோக்கம் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 30, 2026, 7:40 pm
ரோன் 95, ரோன் 97 பெட்ரோலின் விலைகள் 10 சென் குறைந்தது
June 30, 2026, 7:39 pm
ஜொகூரில் நிலையான ஆட்சி அமைவதில் இந்தியர்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது: குணராஜ்
June 30, 2026, 5:32 pm
நாளை முதல் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் மலேசிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்
June 30, 2026, 4:42 pm
