நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

6 வயது மாணவர் சேர்க்கையில் முழுமையான திட்டமிடல் அவசியம்: தாம் யூன் ஃபூக்

கோத்தா கினபாலு:

அடுத்த ஆண்டு தொடக்கம் 6 வயது குழந்தைகளை முதலாம் வகுப்பில் சேர்க்கும் கல்வி அமைச்சின் திட்டம், போதுமான ஆய்வும் திட்டமிடலும் இன்றி முன்னெடுக்கப்பட்டதாக லிக்காஸ் சட்டமன்ற உறுப்பினர் தாம் யூன் ஃபூக் கடுமையாக சுட்டிக்காட்டியுள்ளார்.

2027ஆம் ஆண்டுக்கான முதலாம் வகுப்பு சேர்க்கைக்காக 6 வயது குழந்தைகளிடமிருந்து வெறும் 73,386 விண்ணப்பங்கள் (18.35%) மட்டுமே பெறப்பட்டுள்ளதாக துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ தெரிவித்திருந்தார். இது கல்வி அமைச்சு ஆரம்பத்தில் கணித்திருந்த 4 இலட்சம் மாணவர் சேர்க்கை இலக்கை விட மிகவும் குறைவானது என தாம் குறிப்பிட்டார்.

“இந்த எண்ணிக்கைகள், பெரும்பாலான பெற்றோர்கள் இன்னும் தங்கள் குழந்தைகளை 7 வயதிலேயே பள்ளியில் சேர்க்க விரும்புகின்றனர் என்பதைக் காட்டுகின்றன. அதேவேளை, 6 வயது சேர்க்கை திட்டத்தின் மீது பொதுமக்களிடம் முழுமையான நம்பிக்கை உருவாகவில்லை என்பதையும் இது வெளிப்படுத்துகிறது,” என்றார் அவர்.

முன்னாள் மூத்த கல்வி அதிகாரியான தாம், பெற்றோர், மாணவர்கள், கல்வி அமைப்பின் தயார்நிலையை முழுமையாக மதிப்பீடு செய்யாமல் இந்தக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.

மேலும், இந்தத் திட்டத்திற்காக ஆரம்பத்தில் 20,000 கூடுதல் ஆசிரியர்கள் தேவைப்படும் என கல்வி அமைச்சு கணித்திருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 3,150 ஒப்பந்த ஆசிரியர்களாக குறைக்கப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக அவர் தெரிவித்தார்.

“தரவுகளின் துல்லியம், முன்கணிப்பு முறை, கொள்கை உருவாக்கத்தில் பின்பற்றப்பட்ட தீர்மான நடைமுறைகள் குறித்து இந்த நிலைமை சந்தேகங்களை ஏற்படுத்துகிறது,” என்று அவர் கூறினார்.

கல்விக் கொள்கைகள் நாட்டின் எதிர்கால தலைமுறையை வடிவமைப்பவை என்பதால், அவற்றை அவசரமாக அல்லாமல், விரிவான தாக்க மதிப்பீடு, பொதுமக்கள் ஆலோசனை, உறுதியான செயல் திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே செயல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், கணிக்கப்பட்ட மாணவர் சேர்க்கை எண்ணிக்கைக்கும் உண்மையில் கிடைத்த விண்ணப்பங்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இடைவெளிக்கான காரணத்தைக் கல்வி அமைச்சு வெளிப்படையாக விளக்க வேண்டும் என்றும் தாம் யூன் ஃபூக் கோரிக்கை விடுத்தார்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset