நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆவணச் சரிபார்ப்பில் அலட்சியம் வேண்டாம்: முதலாளிகளுக்கு JPN எச்சரிக்கை

கிள்ளான்: 

வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக மாற்றியமைக்கப்பட்ட MyKad புகைப்படங்களைப் கைப்பேசியில் காட்டி மோசடி செய்யும் புதிய தந்திரம் அம்பலமாகியுள்ள நிலையில், பணியாளர்களை நியமிக்கும் போது கைப்பேசியில் உள்ள அடையாள அட்டை படத்தை மட்டும் நம்ப வேண்டாம் என தேசிய பதிவுத் துறை (JPN) முதலாளிகளுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேசிய பதிவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ பத்ருல் ஹிஷாம் அலியாஸ், சிலர் மற்றவர்களின் MyKad-இல் உள்ள புகைப்படத்தை மாற்றியமைத்து, அதன் படத்தை கைப்பேசியில் சேமித்து வைத்து வேலைவாய்ப்பு நேர்காணல்களில் பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

“மாற்றியமைக்கப்பட்ட MyKad படத்தை கைப்பேசியில் காட்டி, உண்மையான ஆவணமின்றி வேலைக்குச் சேரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, முதலாளிகள் ஆவணத்தைச் சமர்ப்பிக்கும் நபர் அதன் உண்மையான உரிமையாளரா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

 மேலும், MyKad பயன்படுத்தப்படுமானால் அதன் இயற்பியலைக் கட்டாயம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், கடவுச்சீட்டு பயன்படுத்தப்பட்டால் அது செல்லுபடியாகும் ஆவணமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

புலாவ் இண்டாவில் உள்ள உறைபதப்படுத்தப்பட்ட உணவுத் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட “Ops Kisar” சோதனை நடவடிக்கையின் போது, சிலர் நண்பர்கள் அல்லது உறவினர்களின் MyKad-ஐ இலவசமாகப் பயன்படுத்தியதோடு, சிலர் போலி அடையாள அட்டைகளைப் பெற 350 ரிங்கிட் வரை செலுத்தியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

“வேறொருவரின் MyKad-ஐ பயன்படுத்துவது அல்லது வைத்திருப்பது, எந்த நோக்கத்திற்காக இருந்தாலும், 1990 தேசிய பதிவு விதிமுறைகளின் கீழ் குற்றமாகும்,” என அவர் எச்சரித்தார்.

மாலை 6.30 மணிக்கு தொடங்கிய அதிரடி நடவடிக்கையில், 18 முதல் 50 வயதுக்குட்பட்ட 36 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 32 பெண்களும் நான்கு ஆண்களும் அடங்குவர். பெரும்பாலானோர் இந்தோனேசியப் பிரஜைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் போலி MyKad அல்லது பிறரின் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்றதாக சந்தேகிக்கப்படுகின்றனர். இந்த வழக்கு 1990 தேசிய பதிவு விதிமுறைகளின் விதி 25(1)(e)-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதனுடன், குடிவரவுச் சட்ட மீறல்களுக்காக மேலும் 33 வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு எதிராக தொழிலாளர் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.

அடையாள மோசடிகள் நாளுக்கு நாள் நவீன வடிவம் எடுத்து வரும் நிலையில், வேலைக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனங்கள், முதலாளிகள் ஆவணங்களை முழுமையாக சரிபார்க்கும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் என JPN மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset