நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தால் மலேசியாவிற்கு 5.98 மில்லியன் ரிங்கிட் பெட்ரோல் மானியம் சேமிப்பு

புத்ராஜெயா:

அரசின் வீட்டிலிருந்து வேலை (BDR) திட்டம், அமல்படுத்தப்பட்டதிலிருந்து இன்று வரை 5.98 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ரோன்95 பெட்ரோல் மானியத்தை சேமித்துள்ளதாக தேசிய தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சேமிப்பு, 3.13 மில்லியன் லிட்டர் பெட்ரோலுக்குச் சமமானது என்றும், கடந்த ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வந்த BDR திட்டத்தின் மூலம் இந்த முன்னேற்றம் பதிவாகியுள்ளதாகவும் அவர் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டார்.

 உலகளாவிய விநியோக நெருக்கடியால் ஏற்பட்ட நிதிச் சுமையைக் குறைப்பதில் இந்த முயற்சி அரசாங்கத்திற்குக் கணிசமான உதவியாக அமைந்துள்ளது என்றார் அவர்.

மேலும், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற டிஜிட்டல் அரசாங்கக் கூட்டத்தில், அரசு ஊழியர்களின் வருகை, தினசரி பணிப் பதிவுகளைக் கண்காணிக்கும் SPOT-Me செயலி திறம்பட செயல்பட்டு வருவதாகவும், அது பொதுச் சேவையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் முக்கியமான டிஜிட்டல் கட்டுப்பாட்டு கருவியாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த மே 26 நிலவரப்படி 4.22 மில்லியன் ரிங்கிட் மானியம் சேமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த தொகை 5.98 மில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், IMD வெளியிட்ட 2026 உலக போட்டித்திறன் குறியீட்டு அறிக்கையில், தொழில்நுட்ப உள்கட்டமைப்பு துறையில் மலேசியா உலகில் 13-வது இடத்தை பிடித்துள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த ஆண்டு 25-வது இடத்தில் இருந்த நாட்டிற்கு இது மிகப்பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

எதிர்காலத்தில் தரவு இறையாண்மை, பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு (AI), MyDigital ID ஒருங்கிணைப்பு, காகிதமற்ற நிர்வாகம் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

“டிஜிட்டல் மாற்றம் என்பது வெறும் தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டுமல்ல; மக்களின் வாழ்க்கைக்கு உண்மையான மதிப்பை வழங்கும் நிர்வாகப் புரட்சி,” என்ற கருத்தை இந்த சாதனை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset