செய்திகள் மலேசியா
நாட்டின் வர்த்தகத் துறைக்கு புதிய சவால்: மலேசியாவுக்கு 10% கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா பரிசீலனை
கோலாலம்பூர்:
கட்டாய உழைப்பு தொடர்பான விசாரணையின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மலேசியா மீது 10 விழுக்காடு கூடுதல் இறக்குமதி வரி விதிக்க அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முன்னேற்றம், மலேசியாவின் ஏற்றுமதி, வர்த்தகத் துறையில் புதிய சவால்களை உருவாக்கக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வர்த்தகச் சட்டம் பிரிவு 301-ன் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 60 நாடுகளில் மலேசியாவும் இடம்பெற்றுள்ளதாக முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா முன்னெடுத்து வரும் விசாரணைகள் அதிகப்படியான உற்பத்தித் திறன், கட்டாய உழைப்பு, சுற்றுச்சூழல் பிரச்சினைகள், அரசாங்க மானியங்கள் ஆகிய நான்கு முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டுள்ளன. இதில், மலேசியா அதிகப்படியான உற்பத்தித் திறன், கட்டாய உழைப்பு (forced labour) என்ற இரண்டு பிரிவுகளில் மட்டுமே விசாரணையை எதிர்கொண்டு வருகிறது.
“கட்டாய உழைப்பு தொடர்பான விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜூலை 24-ஆம் தேதிக்குப் பிறகு, மலேசியா மீது சுமார் 10 விழுக்காடு கூடுதல் வரி விதிக்கப்படலாம் என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது,” என்று அவர் டேவான் ராக்யாட்டில் நடைபெற்ற அமைச்சர் கேள்வி நேரத்தின் போது தெரிவித்தார்.
அதேவேளை, அதிகப்படியான உற்பத்தித் திறன் தொடர்பான விசாரணை இன்னும் முடிவுக்கு வராததால், அதுகுறித்த இறுதி முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் முன்னர் விதிக்கப்பட்டிருந்த எதிர் வரிகள், அமெரிக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் செல்லாததாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1974 வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 122-ன் கீழ் 150 நாட்களுக்கு அமலாகும் 10 விழுக்காடு தற்காலிக உலகளாவிய இறக்குமதி வரியை அமெரிக்கா அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் விளக்கமளித்தார்.
இந்தப் புதிய வரி நடவடிக்கை அமலுக்கு வந்தால், மலேசியாவின் ஏற்றுமதி துறைக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், வர்த்தக வட்டாரங்களில் பெரும் கவனம் நிலவி வருகிறது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 23, 2026, 5:35 pm
