செய்திகள் மலேசியா
முன்னாள் தோட்ட ஆலயங்களுக்கு மாற்று நிலத்தை வழங்குவதற்கு மேம்பாட்டு நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும்: குணராஜ்
ஷாஆலம்:
முன்னாள் தோட்ட ஆலயங்களுக்கு மாற்று நிலத்தை வழங்குவதற்கு மேம்பாட்டு நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும்.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் இதனை கூறினார்.
நூற்றாண்டுகள் ஆனாலும் இன்னும் தெளிவான நில அந்தஸ்து இல்லாத முன்னாள் தோட்ட ஆலயங்களின் பிரச்சினையை நான் குறிப்பிட விரும்புகிறேன்.
அனைத்துக் கட்சிகளின் தீவிரக் கவனத்தையும் கோரும் ஒரு பிரச்சினையாக, இந்தப் பிரச்சினையை சிலாங்கூர் மாநில சட்டமன்ற கூட்ட விவாதத்திலும் எழுப்பியுள்ளேன்.
தோட்டத் தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினரின் மதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்த நாட்டில் உள்ள பல இந்து கோயில்கள் தோட்ட உரிமையாளர்களின் அனுமதி, ஆதரவுடன் தோட்டப் பகுதிகளில் கட்டப்பட்டன என்பதை வரலாறு காட்டுகிறது.
இந்த ஆலயங்கள் உள்ளூர் சமூகத்தின் வாழ்வின் ஒரு அங்கமாகி, அச்சமூகத்தின் கலாச்சாரம், பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன.
இருப்பினும் வீடமைப்பு மேம்பாடு, புதிய நகரங்கள் அல்லது வணிகத் திட்டங்களுக்காக தோட்ட நிலங்கள் புதிய உரிமையாளர்களுக்கு விற்கப்படும்போது, தற்போதுள்ள பல ஆலயங்களுக்கு பொருத்தமான தீர்வுகள் வழங்கப்படுவதில்லை.
சில ஆலயங்கள் சட்டப்பூர்வ நில அந்தஸ்து இல்லாமல் தங்கள் அசல் இடங்களிலேயே தொடர்ந்து இருக்கின்றன.
மற்றவை பொருத்தமான மாற்று இடம் இல்லாமல் வெளியேற்றப்படும் அபாயத்தை எதிர்கொள்கின்றன.
ஆரம்பத்திலிருந்தே தீர்வுகளை வழங்கத் தவறியதன் விளைவாக, இன்று பல பாரம்பரிய தோட்ட ஆலயங்கள் அங்கீகரிக்கப்படாத ஆலயங்கள் அல்லது சட்டவிரோத ஆலயங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலைமை நியாயமற்றது, ஏனெனில் இந்த ஆலயங்கள் முந்தைய தோட்ட உரிமையாளர்களின் அறிவு, அனுமதியுடன் நிறுவப்பட்டு, பல தலைமுறைகளாக உள்ளூர் சமூகத்திற்கு சேவை செய்து வருகின்றன.
எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்காக நிறுவப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு ஒரு நியாயமான தீர்வு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பாக அசல் தோட்ட உரிமையாளர்களும், நிலத்தைக் கையகப்படுத்திய மேம்பாட்டு நிறுவனங்களும் தார்மீக, சமூகப் பொறுப்பை ஏற்க வேண்டும்.
ஏற்கெனவே வழிபாட்டுத் தலங்களைக் கொண்ட முன்னாள் தோட்ட நிலத்தை உள்ளடக்கிய ஒவ்வொரு கட்டுமானப் பணியும், அப்பணி செயல்படுத்தப்படுவதற்கு முன்பு பொருத்தமான மாற்று இடத்தை வழங்குவதன் மூலம் மீள்குடியேற்றத்தின் தேவையைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் ஏற்கெனவே வழிபாட்டுத் தலங்களைக் கொண்ட முன்னாள் தோட்ட நிலத்தைக் கையகப்படுத்தும் ஒவ்வொரு மேம்பாட்டு நிறுவனமும், ஆலயங்களை இடமாற்றம் செய்யும் நோக்கத்திற்காக பொருத்தமான மாற்று நிலத்தை கெசட் செய்ய வேண்டும் என்றும் நான் வலியுறுத்துகிறேன்.
மாற்று நிலத்தை வழங்குவது மட்டும் போதாது. நிலத்தின் நிலை தீர்க்கப்படாவிட்டால், அது எதிர்காலத்தில் அதே சிக்கல்களை ஏற்படுத்தும்.
எனவே, உள்ளூர் சமூகத்திற்கு உறுதியையும் நிச்சயத்தன்மையையும் வழங்குவதற்காக, கெசட் வெளியிடும் செயல்முறை உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டும்.
இன்று நாம் அனுபவிக்கும் வளர்ச்சியானது, தலைமுறை தலைமுறையாக இந்த வழிபாட்டுத் தலங்களைக் கட்டிப் பராமரித்து வந்த தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் வரலாற்றையும் பங்களிப்புகளையும் புறக்கணிக்கக் கூடாது என்று குணராஜ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 23, 2026, 11:52 am
சமுக உறவைகளை விளையாட்டு போட்டிகள் வலுப்படுத்துகின்றன: வின்சன்
June 23, 2026, 11:37 am
பாதுகாப்புப் படை சீருடையில் ஆயுதத்துடன் சுற்றிய மர்ம நபர்: தீவிர விசாரணையில் களமிறங்கும் போலிஸ்
June 23, 2026, 10:46 am
