செய்திகள் மலேசியா
மடானி மார்ட் குறித்து அதிர்ச்சி தகவல்: இரண்டு கிளைகள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் விற்க உரிமம் பெற்றுள்ளன
கோலாலம்பூர்:
நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த மடானி மார்ட் வலையமைப்பில், கட்டுப்படுத்தப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்ய உரிமம் பெற்றிருப்பது வெறும் இரண்டு கிளைகள் மட்டுமே என உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவுக் கட்டுப்பாட்டு அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹம்மத் அலி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சர் கேள்வி நேரத்தில் அவர், மடானி மார்ட் தொடர்பாக இயங்கும் கிளைகளின் எண்ணிக்கை, பெறப்பட்ட விண்ணப்பங்கள் அல்லது அதில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோரின் எண்ணிக்கை போன்ற விவரங்கள் அமைச்சகத்திடம் இல்லை என்று குறிப்பிட்டார்.
அரிசி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களைச் சேமித்து விற்பனை செய்யும் எந்தவொரு வளாகமும் 1961ஆம் ஆண்டின் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் உரிய உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர் விளக்கினார்.
அமைச்சகப் பதிவுகளின்படி, தற்போது இரண்டு மடானி மார்ட் கிளைகள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் விற்பனைக்கான உரிமத்தை பெற்றுள்ளன. அவை தனித்தனி இரண்டு வணிக நிறுவனங்களின் கீழ் இயங்குகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மடானி மார்ட் என்பது அரசாங்கத்தின் நேரடி திட்டமல்ல; மாறாக மடானி அறக்கட்டளைக்குச் சொந்தமான தனியார் சில்லறை வணிகப் பிராண்ட் என அர்மிசான் தெளிவுபடுத்தினார். அந்தப் பிராண்டைப் பயன்படுத்த விரும்பும் நிறுவனங்களுக்கு அறக்கட்டளை உரிமம் வழங்குவதாகவும், அதன் பதிவு, செயல்பாடுகள் அறக்கட்டளைக்கும் உரிமதாரர்களுக்கும் இடையிலான விவகாரம் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சிகளுக்கும், உள்ளூர் தொழில்முனைவோருக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களுக்கும் அமைச்சகம் தொடர்ந்து ஆதரவு வழங்கும் என அவர் உறுதியளித்தார்.
மடானி மார்ட் குறித்த இந்தப் புதிய தகவல், அதன் விரிவாக்கம், செயல்பாட்டு நிலை குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 23, 2026, 11:52 am
சமுக உறவைகளை விளையாட்டு போட்டிகள் வலுப்படுத்துகின்றன: வின்சன்
June 23, 2026, 11:37 am
பாதுகாப்புப் படை சீருடையில் ஆயுதத்துடன் சுற்றிய மர்ம நபர்: தீவிர விசாரணையில் களமிறங்கும் போலிஸ்
June 23, 2026, 10:46 am
