செய்திகள் மலேசியா
பாதுகாப்புப் படை சீருடையில் ஆயுதத்துடன் சுற்றிய மர்ம நபர்: தீவிர விசாரணையில் களமிறங்கும் போலிஸ்
கோலாலம்பூர்:
கெப்போங் பகுதியில் பாதுகாப்புப் படை வீரரைப் போன்று சீருடை அணிந்து, ஆயுதம் ஏந்தியபடி நடமாடிய மர்ம நபரின் காணொலி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான புகார் நேற்று மாலை 4.31 மணியளவில் தமது தரப்புக்குக் கிடைத்ததாகக் கோம்பாக் மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் இப்ராஹிம் ஹுசைன் தெரிவித்தார். வாட்ஸ்அப் மூலம் பரவிய காணொலியில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாதுகாப்புப் படையினரின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்து, போலி ஆயுதம் என சந்தேகிக்கப்படும் பொருளைக் கையில் வைத்திருப்பது பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் கெப்போங்கிலுள்ள தாமான் புக்கிட் டேசா பகுதியில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளதுடன், இராணுவம், கடற்படை அல்லது விமானப்படை சீருடையைச் சட்டவிரோதமாக அணிந்ததாக தண்டனைச் சட்டம் பிரிவு 140-ன் கீழும், போலி ஆயுதத்தை வைத்திருந்ததாகவும் இறக்குமதி செய்ததாகவும் சந்தேகிக்கப்படுவதால் 1960 ஆயுதச் சட்டம் பிரிவு 36-ன் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், பிரிவு 140-ன் கீழ் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது 1,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம். அதேவேளை, ஆயுதச் சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு வரை சிறைத்தண்டனையும் 5,000 ரிங்கிட் வரை அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
வைரலான காணொலியில் இரவு நேரத்தில் அமைதியான சாலையின் நடுவே சீருடை அணிந்த நபர் ஒருவர் ஆயுதம் போன்ற பொருளை ஏந்தியபடி நடந்து செல்வது தெளிவாகக் காணப்படுகிறது. அப்பகுதியில் சாலை விளக்குகள், ஓரமாக நிறுத்தப்பட்ட சில வாகனங்கள் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள் அல்லது நேரில் கண்டவர்கள், கோம்பாக் மாவட்ட காவல்துறையின் குற்றப் புலனாய்வு அதிகாரிகளைத் தொடர்புகொண்டு விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவிய இந்த மர்மக் காட்சி, பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், சம்பவத்தின் உண்மை நிலையைக் கண்டறிய காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 23, 2026, 11:52 am
சமுக உறவைகளை விளையாட்டு போட்டிகள் வலுப்படுத்துகின்றன: வின்சன்
June 23, 2026, 10:46 am
கூலாயில் கோர விபத்து: 4 லாரிகள், 2 கார்கள் தீப்பிடித்து எரிந்தன
June 23, 2026, 10:00 am
