நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூலாயில் கோர விபத்து: 4 லாரிகள், 2 கார்கள் தீப்பிடித்து எரிந்தன

கூலாய்: 

வடக்கு–தெற்கு விரைவுச் சாலையின் (PLUS) தெற்கு நோக்கிய பாதையில் இன்று காலை இடம்பெற்ற பயங்கர சாலை விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூலாய், செடேனாக் இடையிலான 31.8-ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த இந்த விபத்தில், நான்கு லாரிகள், இரண்டு கார்கள் உட்பட பல வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன.

ஆரம்பத் தகவல்களின்படி, இந்தக் கோர விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இருப்பினும், உயிரிழந்தோர் அல்லது காயமடைந்தோர் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வரும் புகைப்படங்கள், காணொலிகளில் பல வாகனங்கள் முழுவதுமாக தீப்பிடித்து எரிவதும், வானத்தை நோக்கி அடர்ந்த கரும்புகை எழுவதும் பதிவாகியுள்ளன. மோதலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்ததால், சம்பந்தப்பட்ட வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.

கூலாய் ஓய்வு, சேவை மையத்தை (R&R) கடந்த பின்னர் தெற்கு நோக்கிய பாதையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக PLUS மலேசியா பெர்ஹாட் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் காரணமாக இரு திசைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணியாளர்கள், அவசர சேவைக் குழுக்கள் தீயைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட வாகனங்களை அகற்றவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

செய்தி வெளியிடப்படும் நேரம் வரை, தெற்கு நோக்கிய அனைத்து பாதைகளும் முழுமையாக மூடப்பட்டிருந்ததால், ஆயிரக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் சிக்கித் தவித்தன.

அதிகாரிகள் சம்பவத்தின் உண்மையான காரணம், பாதிக்கப்பட்டோர் தொடர்பான விவரங்களை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

ஒரே கணத்தில் தீக்கடலாக மாறிய இந்த விபத்து, கூலாய் நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset