செய்திகள் மலேசியா
‘புகார் அளிக்க வரும் ஒவ்வொருவரும் சமம்’: பாகுபாடின்றி அனைத்து புகார்களையும் ஏற்க வேண்டும் என MCCC வலியுறுத்தல்
கோலாலம்பூர்:
பொதுமக்கள் காவல் நிலையங்களுக்குக் கொண்டு வரும் அனைத்து புகார்களும், அவர்களின் உடை, இனம் அல்லது சமூகப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற காவல்துறையின் அணுகுமுறை, மக்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரிப்பதோடு தேசிய பாதுகாப்பு அமைப்பின் மீதான மரியாதையையும் வலுப்படுத்தும் என மலேசிய சமூக குற்றத் தடுப்பு மன்றம் (MCCC) தெரிவித்துள்ளது.
பஹாங் மாநில MCCC தலைவர் டேனியல் கூ, மக்களின் பாதுகாப்பு எந்தவொரு பாகுபாட்டையும் விட மேலானதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவசரநிலை, குற்ற அச்சுறுத்தல் அல்லது உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் சிக்குபவர்கள் அனைவருக்கும் சமமான பாதுகாப்பும் உதவியும் வழங்கப்படுவது அவர்களின் அடிப்படை உரிமை என்று குறிப்பிட்டார்.
அவரின் கூற்றுப்படி, இந்த அணுகுமுறை அரச மலேசிய காவல்துறை (PDRM) மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதையும், நீதி, சமத்துவக் கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றுவதையும் வெளிப்படுத்துகிறது.
மேலும், குற்றத் தடுப்பு, குற்ற ஒழிப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைய, காவல்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை மிக முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“மக்கள் தாங்கள் நியாயமாக நடத்தப்படுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்தால், புகார் அளிக்கவும், தகவல்களைப் பகிரவும், அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவும் தயங்க மாட்டார்கள். பொதுமக்களின் நம்பிக்கையே நாட்டின் பாதுகாப்பு அமைப்பின் மிகப்பெரிய பலமாகும்,” என்று அவர் தெரிவித்தார்.
மனிதாபிமானம், சமத்துவ, தொழில்முறை அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்ட இந்த நடைமுறை, நாடு முழுவதும் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ டென்னிஸ் லிம், மாநிலத்தின் அனைத்து மாவட்ட காவல் தலைவர்களுக்கும் (OCPD), காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களின் புகார்களை அவர்களின் உடை, இனம் அல்லது பின்னணியைப் பொருட்படுத்தாமல் ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
“சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்ற கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தும் இந்த நடவடிக்கை, மக்கள், காவல்துறைக்கு இடையிலான நம்பிக்கைப் பாலத்தை மேலும் உறுதிப்படுத்தும் முக்கிய முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 23, 2026, 11:52 am
சமுக உறவைகளை விளையாட்டு போட்டிகள் வலுப்படுத்துகின்றன: வின்சன்
June 23, 2026, 11:37 am
பாதுகாப்புப் படை சீருடையில் ஆயுதத்துடன் சுற்றிய மர்ம நபர்: தீவிர விசாரணையில் களமிறங்கும் போலிஸ்
June 23, 2026, 10:46 am
