நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வருமானத்தைத் தாண்டி வாழ்க்கைச் செலவையும் கணக்கிடும் புதிய அரசு திட்டம்

கோலாலம்பூர்: 

மலேசியாவில் நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வரும் B40, M40, T20 வருமான வகைப்பாடுகள் தற்போதைக்கு தொடரும் என அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதேவேளை, மக்களின் உண்மையான வாழ்க்கைச் செலவையும் நிதிச் சுமையையும் பிரதிபலிக்கும் புதிய, விரிவான, நியாயமான வகைப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தும் முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லாஹ் முஹம்மத் நாசிர், 2026 முதல் 2030 வரையிலான 13-வது மலேசியத் திட்டத்தின் (RMK13) ஒரு பகுதியாக, சமூக உதவிகள், நலத்திட்டங்களை மேலும் துல்லியமாக இலக்கு குழுக்களுக்கு வழங்கும் புதிய அணுகுமுறைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.

தற்போது, சமூக உதவிகளுக்கான தகுதி வரம்பு தேசிய வறுமைக் கோட்டு வருமானம் (PGK) 2,705 ரிங்கி்ட் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மொத்த வருமானத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட B40, M40, T20 வகைப்பாடு, குடும்பங்களின் உண்மையான பொருளாதார நிலையை முழுமையாக பிரதிபலிக்கவில்லை என அரசு கருதுகிறது.

 அரசு பரிசீலித்து வரும் முக்கியமான புதிய முறைகளில் ஒன்று நிகர செலவழிக்கத்தக்க வருமானம் (Net Disposable Income - NDI) ஆகும்.
இந்த முறை, குடும்பத்தின் மொத்த வருமானத்திலிருந்து ஊழியர் வருங்கால வைப்பு நிதி (KWSP), சமூக பாதுகாப்பு அமைப்பு (PERKESO), வருமான வரி, ஜகாத் போன்ற கட்டாயக் கழிவுகளை நீக்கிய பின் கிடைக்கும் உண்மையான வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்கிறது.

மேலும், வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைச் செலவுகள் (PAKW), வசிப்பிடப் பகுதி, குடும்ப அமைப்பு, செலவின முறை, அத்தியாவசிய பொருட்களின் விலை நிலவரம் போன்ற காரணிகளும் இதில் கருத்தில் கொள்ளப்படும்.

மக்களின் உண்மை நிலையைப் பிரதிபலிக்கும் புதிய பாதை அமைச்சரின் கூற்றுப்படி, புதிய வகைப்பாட்டு முறை நடைமுறைக்கு வருவதற்கு முன், குடும்பங்களின் முழுமையான தரவுகள் சேகரிக்கப்பட்டு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்பிறகே அதன் அமலாக்கம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

இந்த புதிய அணுகுமுறை, வெறும் வருமான எண்ணிக்கைகளைத் தாண்டி, மக்களின் உண்மையான வாழ்க்கைத் தரம், பொருளாதார சுமையை மதிப்பிடும் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset