நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டீசல் விலை குறைந்தாலும் விவசாயிகளின் சுமை உடனே குறையாது: PeSAWAH எச்சரிக்கை

அலோர் ஸ்டார்: 

ஜூலை மாதம் முதல் டீசல் விலையை லிட்டருக்கு 2.10 ரிங்கிட்டாகக் குறைக்கும் அரசாங்கத்தின் அறிவிப்பு விவசாயிகளிடையே வரவேற்பைப் பெற்றிருந்தாலும், உழவு, விதைப்பு, அறுவடை உள்ளிட்ட விவசாய சேவைகளின் கட்டணங்கள் உடனடியாக குறையும் என எதிர்பார்க்க முடியாது என்று மலேசிய விவசாயிகள் சகோதரத்துவ அமைப்பு (PeSAWAH) தெரிவித்துள்ளது.

டீசல் மானிய மறுசீரமைப்புக்குப் பின்னர் விவசாய இயந்திர இயக்குநர்கள் நீண்ட காலமாக அதிக செயல்பாட்டு செலவுகளைச் சந்தித்து வந்ததால், ஏற்கனவே உயர்த்தப்பட்ட சேவைக் கட்டணங்களை உடனடியாகக் குறைப்பது சாத்தியமற்ற ஒன்றாகும் என்று PeSAWAH தலைவர் அப்துல் ரஷீத் யோப் தெரிவித்துள்ளார்.

அவரின் கூற்றுப்படி, சந்தை விலைக்கு டீசல் வாங்கியதால் இயந்திர உரிமையாளர்கள் சேவைச் செலவுகளை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, டீசல் விலை குறைந்ததன் காரணமாக மட்டுமே பழைய கட்டண நிலைக்குத் திரும்புவது எளிதானதாக இருக்காது.

தற்போது சில பகுதிகளில் இருமுறை நில உழவு செய்யும் செலவு, ஒரு ரிலுங் (0.28 ஹெக்டேர்) நிலத்திற்கு 160 இலிருந்து 300 ரிங்கிட்டைத் தாண்டியுள்ளது. 

அதேவேளை, டிராக்டர் சேவை கட்டணம் 120 இலிருந்து 180–200 ரிங்கிட் ஆகவும், அறுவடை இயந்திர சேவை 180 ரிங்கிட்டிலிருந்து 250 ரிங்கிட் ஆகவும் உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“டீசல் விலை குறைப்பு நிச்சயமாக மகிழ்ச்சியான செய்தி. ஆனால் அதன் பயன் உண்மையில் விவசாய இயந்திர இயக்குநர்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் தெளிவான நடைமுறை இல்லையெனில், தற்போதைய சேவைக் கட்டணங்கள் தொடர வாய்ப்பு அதிகம்,” என்று அவர் வலியுறுத்தினார்.

இதனால், டீசல் விலை குறைப்பின் நன்மைகள் விவசாயிகள் வரை சென்றடைய, அரசாங்கம் திறன்மிக்க, வெளிப்படையான செயல்முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என PeSAWAH கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், விவசாய சேவை வழங்குநர்களிடையே ஆரோக்கியமான போட்டி உருவானால் மட்டுமே கட்டணங்களில் நியாயமான குறைப்பு ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

நேற்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சபா, சரவாக் உட்பட நாடு முழுவதும் டீசல் விலையை லிட்டருக்கு 2.10 ரிங்கிகிட்டாகக் குறைக்கும் முடிவை அறிவித்தார். இந்த நடவடிக்கை ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது.

டீசல் விலை குறைந்தாலும், விவசாய உற்பத்திச் செலவுகள் குறையுமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. அரசாங்கத்தின் புதிய கொள்கையின் உண்மையான பலன் விவசாயிகளின் கைகளில் எப்போது சேரும் என்பதையே அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset