நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலகில் தாயின் அன்பைப் போலவே, தந்தையின் தியாகமும் அளவிட முடியாது: டத்தோஸ்ரீ சரவணன் வாழ்த்து

கோலாலம்பூர்:

உலகில் தாயின் அன்பைப் போலவே, தந்தையின் தியாகமும் அளவிட முடியாத ஒன்று.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் தனது தந்தையர் தின வாழ்த்து செய்தியில் கூறினார்.

குடும்பத்தின் நலனுக்காக தன் ஆசைகளையும் சுகங்களையும் தியாகம் செய்து, பிள்ளைகளின் எதிர்காலத்தை வளமாக்குவதற்காக உழைக்கும் அனைத்து தந்தையர்களுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள்.

ஒரு தந்தையின் கடமை என்பது வெறும் குடும்பத்தைப் பராமரிப்பது மட்டுமல்ல.

கல்வி, ஒழுக்கம், பண்பாடு, பொறுப்பு உணர்வு ஆகியவற்றை பிள்ளைகளுக்கு விதைத்து, அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வழிகாட்டும் முன்னோடியாகவும் அவர் திகழ்கிறார்.

திருவள்ளுவர் கூறும் “தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்” என்ற குறள், தந்தையின் கடமையையும் பெருமையையும் அழகாக எடுத்துரைக்கிறது.

தோள்மீதும், நெஞ்சுமீதும் பிள்ளைகளைத் தூக்கிச் சுமந்து வளர்க்கும் தந்தையர்களின் தியாகம் சொல்லில் அடங்காதது.

அவர்கள் தங்களது அன்பை பெரும்பாலும் வார்த்தைகளால் வெளிப்படுத்த மாட்டார்கள்.

ஆனால் அவர்களின் ஒவ்வொரு உழைப்பும், ஒவ்வொரு வியர்வைத் துளியும், குடும்பத்தின் மீதான அக்கறையையும் பாசத்தையும் வெளிப்படுத்துகின்றன.

முன்பு தந்தை என்றால் கண்டிப்பானவர், மரியாதைக்குரியவர், சில நேரங்களில் அச்சத்திற்குரியவர் என்ற எண்ணம் இருந்தது.

இன்று தந்தை என்பது நண்பராகவும், வழிகாட்டியாகவும், பிள்ளைகளின் நம்பிக்கைக்குரியவராகவும் மாறியிருக்கிறார்.

இந்த மாற்றம் குடும்பத்தில் அன்பையும் புரிந்துணர்வையும் வளர்க்கிறது. அதேவேளையில், அன்புடன் கூடிய ஒழுக்கமும் மரியாதையும் குடும்பத்தில் நிலைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

ஒரு குடும்பத்தின் உறுதியான தூணாகவும், பாதுகாப்பு அரணாகவும், பொறுப்பின் அடையாளமாகவும் விளங்கும் அனைத்து தந்தையர்களையும் இந்த நாளில் நாம் போற்றுவோம்.

அவர்களின் அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் நன்றியுடன் நினைவுகூர்வோம்.

நமக்காக இடைவிடாது உழைக்கும் தந்தையருக்கு அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் நாளாக இந்த தந்தையர் தினம் அமையட்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset