நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய இந்திய முஸ்லிம் சமூகத்தின் தேசிய அளவிலான ஒருங்கிணைப்பு மேடையாக முக்மின் பிரம்மாண்டமாக உருவெடுத்து வருகிறது: டத்தோ வீரா ஷாஹுல்

கோலாலம்பூர்: 

மலேசிய இந்திய முஸ்லிம் சமூகத்தின் மிகப்பெரிய வலிமையான கூட்டுக் குரலாகவும் தேசிய அளவிலான ஒருங்கிணைப்பு மேடையாகவும் முக்மின் (MUKMIN) தனது நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளது. சமூக ஒற்றுமை, தலைமை பொறுப்பு, நிலையான சமூக முன்னேற்றம் என்ற பொதுவான நோக்கத்தின் கீழ் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், தொழில் வல்லுநர்கள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள், இளைய தலைவர்கள், சமூக மாற்றத்தின் முன்னோடிகளை ஒன்றிணைக்கும் சக்திவாய்ந்த தளமாக முக்மின் திகழ்கிறது.

அமைப்பின் வளர்ந்து வரும் பங்கைப் பற்றிப் பேசிய முக்மின் தலைவர் டத்தோ வீரா ஷாஹுல் டாவூத், சமூகம் இனி சிதறிக் கிடந்த முயற்சிகளைக் கடந்து, தேச நிர்மாணம், சமூக முன்னேற்றத்திற்கான ஒருங்கிணைந்த, கூட்டுச் செயல்பாட்டு அணுகுமுறையை ஏற்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.

அதன் முதலாவது நிர்வாகக் குழு (EXCO) கூட்டத்தில், கல்வி, தொழில், தலைமைத்துவம், சமூக நலன், சமூக ஒற்றுமை ஆகிய முக்கிய துறைகளில் ஒத்துழைப்பு, கூட்டு தலைமைத்துவம், நடவடிக்கைகள் மூலம் வலிமைமிக்க, ஒற்றுமை நிறைந்த, எதிர்கால நோக்கமிக்க சமூகத்தை உருவாக்குவதற்கான தனது அர்ப்பணிப்பை முக்மின் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.

"நாம் ஒன்றிணைந்து செயல்படும் போதே நமது சமூகத்தின் உண்மையான வலிமை வெளிப்படுகிறது என்ற எளிய ஆனால் ஆழமான நம்பிக்கையின் அடிப்படையில்தான் முக்மின் உருவாக்கப்பட்டது. நமது சமூகம் எதிர்கொள்ளும் அனைத்து அறைகூவல்களையும் ஓர் தனி அமைப்பு மட்டுமே தீர்க்க முடியாது. ஆனால், நாம் ஒன்றிணைந்தால் புதிய வாய்ப்புகளை உருவாக்கலாம், வளங்களைத் திரட்டலாம், அனைவருக்கும் வலுவான எதிர்காலத்தை கட்டியெழுப்பலாம் என்று அவர் கூறினார்.

கல்வி, திறன் மேம்பாடு, தொழில்முனைவு, பொருளாதாரம், தலைமைத்துவம், பிரதிநிதித்துவம், சமூக நலன், சமூக நல்வாழ்வு, மேலும் ஈமான், அடையாளம், உக்குவா (சகோதரத்துவம்) ஆகிய ஐந்து  தூண்களின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் முக்மின், அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், தொழில் வல்லுநர்கள், சமூகத் தலைவர்களை ஒன்றிணைத்து, கூட்டு நடவடிக்கைகள், நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் மூலம் சமூக முன்னேற்றத்தை முன்னெடுக்கும் தேசிய மேடையாக விளங்குகிறது.

"நாங்கள் வெறுமனே இன்னொரு அமைப்பாக இருக்க விரும்பவில்லை. சமூக மாற்றத்திற்கான நம்பகமான தேசிய சூழலமைப்பாக உருவெடுக்க விரும்புகிறோம். மக்களையும், அமைப்புகளையும், வாய்ப்புகளையும் இணைத்து நீடித்த தாக்கத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம்" என்று முக்மின் தலைவர் டத்தோ வீரா ஷாஹுல் டாவூத் தெரிவித்தார்.

கல்வி, வாய்ப்புகளுக்கான அணுகலை விரிவுபடுத்தும் தனது உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, ஆறு கல்வி நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 7 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான உதவித்தொகை உறுதிமொழிகளைப் பெற்றுள்ளதாக முக்மின் அறிவித்துள்ளது. 

குறிப்பாக UNITAR பன்னாட்டுப் பல்கலைக்கழகம், சைபர்ஜெயா பல்கலைக்கழகம், MAHSA பல்கலைக்கழகம், BAC கல்விக் குழுமம், Binary College, SG Academy ஆகும்.

உயர்கல்வி, தொழில்நுட்ப, தொழிற்கல்வி பயிற்சி (TVET) வாயிலாக 350-க்கும் மேற்பட்ட உதவித்தொகை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் நாடு முழுவதும் தகுதியான மாணவர்களுக்கு தரமான கல்வி, திறன் மேம்பாட்டிற்கான அணுகல் மேலும் விரிவடைகிறது. வரும் மாதங்களில் உதவித்தொகை வாய்ப்புகளைக் கணிசமாக விரிவுபடுத்த முக்மின் இலக்கு கொண்டுள்ளது.

பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு திறன், பணியிடத் தயார்நிலையை மேம்படுத்தும் நோக்கில், ‘பட்டதாரியைத் தத்தெடுப்போம்’ (Adopt A Graduate Programme) எனும் புதிய முயற்சியையும் முக்மின் அறிமுகப்படுத்தியுள்ளது.

மலேசியாவின் சுதந்திர மாதக் கொண்டாட்டங்களுடன் இணைந்து, 2026 ஆகஸ்ட் மாதத்தில் முக்மின் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் என்றும் அது உறுதிப்படுத்தியுள்ளது. தேசிய அளவிலான இந்த அறிமுக விழாவில் மலேசியா முழுவதிலுமிருந்து 2,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூகத் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர், இளைஞர் பிரதிநிதிகள், கொள்கை வடிவமைப்பாளர்கள் இதில் கலந்துகொள்வர்.

பிராந்திய அளவிலான முக்கிய சமூக ஈடுபாட்டு முயற்சியாக அமையும் இந்த நிகழ்வில், பல நாடுகளைச் சேர்ந்த இந்திய முஸ்லிம் தலைவர்களும் சமூகப் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர். 

முதலாவது நிர்வாகக் குழுக் கூட்டத்தில், 2026–2027 காலகட்டத்திற்கான முக்மினின்  முன்னுரிமைகள் அங்கீகரிக்கப்பட்டன. அமைப்பு வளர்ச்சி, உறுப்பினர் விரிவாக்கம், இளைஞர் ஈடுபாடு, திட்டங்களின் தாக்கம், சமூக அதிகாரமளித்தல், நீண்டகால நிலைத்தன்மை ஆகியவற்றில் இம்முன்னுரிமைகள் கவனம் செலுத்துகின்றன. அர்த்தமுள்ள மாற்றம் என்பது ஒழுக்கமான செயலாக்கம், வலுவான நிர்வாகம், கூட்டு நடவடிக்கை ஆகியவற்றின் மூலம் மட்டுமே சாத்தியமாகும் என்பதை தலைவர்களுக்கு நினைவூட்டப்பட்டது.

முக்மினின் நீண்டகால இலக்கு, சமூக அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், தொழில் வல்லுநர்களுக்கிடையிலான ஒத்துழைப்பிற்கான நம்பகமான தேசிய மேடையாக உருவெடுப்பதோடு, இந்திய முஸ்லிம் சமூகத்தைப் பாதிக்கும் விவகாரங்களில் ஆக்கபூர்வமான குரலாக விளங்குவதாகும் என்று டத்தோ வீரா ஷாஹுல் மேலும் தெரிவித்தார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset