நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மழையிலும் குறையாத இறை நம்பிக்கை; தெலுக் இந்தான் ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ குபேரலிங்கேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்: விமரிசையாக நடைபெற்றது

தெலுக் இந்தான்:

இடைவிடாமல் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவபெருமானின் அருளைப் பெறும் ஆவலுடன் ஒன்றுகூடிய காட்சியே, பேராக் மாநிலம் தெலுக் இந்தானில் நடைபெற்ற ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ குபேரலிங்கேஸ்வரர் சுவாமி நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவின் சிறப்பம்சமாக அமைந்தது.

தெலுக் இந்தான் 5ஆவது மைல், நோவா ஸ்கோஷியா பிரிவு 1 தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ குபேரலிங்கேஸ்வரர் சுவாமிக்கு நடைபெற்ற இந்த மகா கும்பாபிஷேகத்தில் 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இன்று காலை 10.15 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்ற இந்த ஆன்மிக நிகழ்ச்சி, இத்தோட்ட மண்ணின் மைந்தரும் தொழிலதிபரும், ஆலய அறங்காவலருமான பாலகிருஷ்ணன் முத்துசாமி தலைமையில் பக்தி நிறைந்த சூழலில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

தமிழகத்திலிருந்து வருகை தந்த பிடி சங்கர் சிவாச்சாரியார் தலைமையில், மலேசியா, தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 10 சிவாச்சாரியார்களும் குருக்கள்மார்களும் இணைந்து ஆகம விதிமுறைகளுக்கு அமைவாக அனைத்து பூஜைகளையும் நடத்தினர்.

கும்பாபிஷேகத்தின் உச்ச நிகழ்ச்சியாக, ஆலய கோபுர கலசங்களுக்கு புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டபோது, "ஓம் நமசிவாய" என்ற பக்தி முழக்கம் விண்ணை முட்டியது.

அந்த புனித தருணத்தை தரிசித்த பக்தர்கள் ஆனந்த பரவசத்தில் இறைவனை வணங்கினர்.

மழை தொடர்ந்து பெய்தபோதிலும், பக்தர்களின் இறைநம்பிக்கை சற்றும் தளரவில்லை. மழையில் நனைந்தபடியே ஆலய வளாகத்தில் நின்று வழிபட்ட அவர்கள், சிவபெருமானின் அருளைப் பெறும் அரிய வாய்ப்பாக இந்த மகா கும்பாபிஷேகத்தை கருதி பக்தியுடன் பங்கேற்றனர்.

இந்த ஆன்மிக விழாவில், நோவா ஸ்கோஷியா பிரிவு 1 தோட்டத்தில் வாழ்ந்து பின்னர் பல்வேறு பகுதிகளுக்கு குடிபெயர்ந்த முன்னாள் தோட்டப் பாட்டாளிகளும் தங்கள் குடும்பத்தினருடன் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊரிலுள்ள ஆலயத்தில் ஒன்றுகூடிய அவர்களுக்கு, இந்த மகா கும்பாபிஷேகம் மறக்க முடியாத நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.

வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற யாக பூஜைகள், கலச பூஜைகள், கும்பாபிஷேக வைபவம் பக்தர்களை மெய்சிலிர்க்கச் செய்ததுடன், ஆலய வளாகம் முழுவதும் ஆன்மிக உணர்வை பரப்பியது.

நாட்டின் புகழ்பெற்ற அறிவிப்பாளர் கவிமாறனும் இந்த மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக வழிநடத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset