நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“வரலாற்றில் பெருமை மட்டும் போதாது, அதிலிருந்து பாடம் கற்று எதிர்காலத்தை உருவாக்குங்கள்": சுல்தான் நஸ்ரின் அறிவுறுத்தல்

புத்ராஜெயா: 

கடந்த கால இஸ்லாமிய நாகரிகத்தின் மகத்துவத்தை நினைத்து பெருமிதம் கொள்வது மட்டுமின்றி, அதிலிருந்து வாழ்க்கைப் பாடங்களைக் கற்று எதிர்காலத்தை வெற்றிகரமாக வடிவமைக்க வேண்டும் என்று பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் முயிஸ்ஸுதீன் ஷா வலியுறுத்தியுள்ளார்.

தேசிய அளவிலான மால் ஹிஜ்ரா 1448 கொண்டாட்ட விழாவை புத்ரா பள்ளிவாசலில் இன்று தொடக்கிவைத்து உரையாற்றிய அவர், “மகத்தான சமூகம் என்பது வரலாற்றைப் படித்து பெருமை பேசும் சமூகம் அல்ல; வரலாற்றை வழிகாட்டியாகக் கொண்டு புதிய வெற்றிகளை உருவாக்கும் சமூகமே உண்மையான மகத்தான சமூகம்” என்று கூறினார்.

சுல்தான் நஸ்ரின், நபிகள் நாயகம் (ஸல்) மக்காவிலிருந்து மதீனாவிற்கு மேற்கொண்ட ஹிஜ்ரா பயணம் வெறும் இடமாற்றம் அல்ல; அது மனித வரலாற்றில் மாற்றம், தியாகம், துணிச்சல், தொலைநோக்கு சிந்தனையின் உன்னத எடுத்துக்காட்டு எனப் புகழாரம் சூட்டினார்.

மேலும், நாட்டின் முன்னேற்றத்திற்கான வழிகாட்டியாக ஹிஜ்ரா வரலாறு நான்கு முக்கியப் பாடங்களை வழங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

முதலாவது, உயர்ந்த இலக்குகளை அடைய தியாகம் செய்யும் மனப்பக்குவம். நபிகள் நாயகம் (ஸல்), அவர்களின் தோழர்கள், இறைநம்பிக்கையை நிலைநாட்டுவதற்காக தாயகம், செல்வம், வாழ்க்கை வசதிகளைத் துறந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.

“தியாகம் என்பது வெறும் வார்த்தையல்ல; அது துணிச்சல், பொறுமை, நேர்மை, அர்ப்பணிப்பின் வெளிப்பாடு,” என அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, இன்றைய சமூகத்தில் தியாக உணர்வு மங்கிவருவது கவலையளிப்பதாகவும், தியாகம் பல இடங்களில் வெறும் பேச்சாக மட்டுமே மாறிவிட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.

இரண்டாவது பாடமாக, தொலைநோக்கு பார்வையுடன் கூடிய திட்டமிடல், தலைமைத்துவத்தின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். ஹிஜ்ரா வெற்றி தற்செயலாக நிகழவில்லை; மாறாக மிக நுணுக்கமான திட்டமிடல், சரியான தகவல் சேகரிப்பு, சிறந்த செயலாக்கத்தின் விளைவாக அது அமைந்தது என்றார்.

மூன்றாவது பாடம் ஒற்றுமை, சகோதரத்துவம். முஹாஜிரீன்களுக்கும் அன்சார்களுக்கும் இடையே நபிகள் நாயகம் (ஸல்) உருவாக்கிய சகோதரத்துவம், சமூக வேறுபாடுகளை நீக்கி வலிமையான சமுதாயத்தை உருவாக்கியது என்று அவர் குறிப்பிட்டார்.

மதீனா உடன்படிக்கை, சகிப்புத்தன்மை, பரஸ்பர மரியாதை, நீதிமிக்க தலைமைத்துவம் ஆகியவை பல இன, பல மத மக்களை ஒருங்கிணைத்து அமைதியான சமூகத்தை உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

நான்காவது பாடமாக, மனிதன் தனது முழு முயற்சியையும் மேற்கொண்ட பின் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைக்கும் ‘தவக்கல்’ கொள்கையை அவர் விளக்கினார்.

“தவக்கல் என்பது முயற்சியின்றி காத்திருப்பது அல்ல; முழுமையான முயற்சிக்குப் பின் இறைவனின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் உயர்ந்த நம்பிக்கை,” என்று அவர் கூறினார்.

மால் ஹிஜ்ரா கொண்டாட்டத்தை வெறும் விழாவாகக் கருதாமல், தங்களது வாழ்க்கைப் பயணத்தை மறுபரிசீலனை செய்து, குறைபாடுகளைத் திருத்தி, புதிய இலக்குகளுடன் முன்னேறும் சுயபரிசோதனையின் தருணமாக முஸ்லிம்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் சுல்தான் நஸ்ரின் அழைப்பு விடுத்தார்.

“வரலாறு நமக்கு பெருமை தரலாம்; ஆனால் அதிலிருந்து பெறும் பாடங்களே எதிர்கால வெற்றிக்கான உண்மையான மூலதனம்,” என்ற அவரது உரை, நிகழ்வில் பங்கேற்றவர்களிடையே ஆழமான சிந்தனையை ஏற்படுத்தியது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset